ADDED : செப் 22, 2011 12:30 AM
காஞ்சிபுரம் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காஞ்சிபுரத்தில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்டத் தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலர் முத்துக்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் நேரு, அரசு ஊழியர் சங்கத் தலைவர் சாரங்கன் உட்பட பலர், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகைப் பெற, புதிய நிபந்தனைகள் விதிக்கக் கூடாது. மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் உதவித்தொகை வழங்க வேண்டும். பல்நோக்கு அடையாள அட்டையை, வாக்காளர் அடையாள அட்டை போல் வழங்க வேண்டும். உதவித் தொகையாக, 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.