நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா?
நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா?
நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்குமா?
மதுரை : நெல் சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 26 ஆயிரத்து 626 ரூபாய் செலவாகிறது.
இந்திய பொருளாதாரம் 70 சதவீதம்பேர் செய்யும் விவசாயத்தை சார்ந்தது. வளர்ச்சியடைந்த நாடு என சொல்ல வேண்டுமானால், தேசிய வருவாய் அதிகரிக்க வேண்டும். ஆனால், 70 சதவீத விவசாயிகளின் வருவாய் குறைந்துவிட்டது. விவசாயிகள் நகரங்களை நோக்கி குடிபெயர்கின்றனர். அங்கு நெரிசல் அதிகரித்துள்ளது. இதனால், 'உலகமயமாக்குதல் தளர்த்தப்பட்டு வரும் வியாபாரக் கட்டுப்பாடு' என்னும் கொள்கைக்கு ஊக்கம் அளிக்கின்றனர். கடந்த 1995 முதல் 2010 வரை 2 லட்சத்து 56 ஆயிரத்து 949 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக, மத்திய அரசு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யாதது தற்கொலைக்கு ஒரு காரணம்.
விதை, உரம், பூச்சிமருந்துகளின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. ஆனால், விளைவிக்கும் நெல்லுக்கு லாபகரமான விலை இல்லை; கடனை திருப்பிச் செலுத்த முடியவில்லை. இந்தியாவின் மொத்த நெல் உற்பத்தி 85 முதல் 90 மில்லியன் டன். மொத்த உற்பத்தியில் 25 சதவீதம் மட்டுமே இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.,) கொள்முதல் செய்தது. மீதி நெல்லை, வெளிச்சந்தையில் மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். நெல் விலை பற்றி ஆராய அரியானா முதல்வர் பூபேந்தர் சிங் கோடா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு மத்திய அரசிடம் அளித்த அறிக்கையில், உற்பத்தி செலவு போக கூடுதலாக 50 சதவீதம் விலை நிர்ணயம் செய்ய பரிந்துரைத்தது.
தேசிய விவசாயிகள் கமிஷன் தலைவர் எம்.எஸ்.சாமிநாதன் 2010 ல் மத்திய அரசிடம் சமர்ப்பித்த அறிக்கையில், நெல் குவிண்டாலுக்கு 1650 ரூபாய் வழங்க பரிந்துரைத்தார். இருவரின் பரிந்துரையும், மத்திய அரசு குவிண்டாலுக்கு 1650 ரூபாய் வழங்க வேண்டும் என்பதே. ஆனால், 1050 ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்குகிறது. பாரதிய கிசான் சங்கம், நெல் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் ஆய்வு செய்தது. விவசாயிகளிடம் பெறப்பட்ட விவரத்தின் படி, ஒரு ஏக்கரில் நெல் உற்பத்திக்கு 26 ஆயிரத்து 626 ரூபாய் செலவாகிறது. தஞ்சாவூரில் 27 ஆயிரத்து 416, திருச்சி 26 ஆயிரத்து 420, மதுரை 26 ஆயிரத்து 41, சராசரி 26 ஆயிரத்து 626 ரூபாய். ஒரு ஏக்கர் வருவாய் 24 ஆயிரத்து 150 ரூபாய். நிகர நஷ்டம் 2476 ரூபாய். பாரதிய கிசான் சங்க மாநில பொதுச் செயலாளர் பெருமாள் கூறுகையில்,''அ.தி.மு.க.,தேர்தல் அறிக்கையில் நெல், கரும்புக்கு கூடுதல் விலை நிர்ணயிக்க முயற்சிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதியளித்துள்ளார். மத்திய அரசிடம் பேசி, நெல் குவிண்டாலுக்கு 1650 ரூபாய் வழங்க ஆவன செய்ய வேண்டும்,'' என்றார்.