முதல்வர் அறிவிப்புக்கு ஊர்க்காவல் படையினர் வரவேற்பு
முதல்வர் அறிவிப்புக்கு ஊர்க்காவல் படையினர் வரவேற்பு
முதல்வர் அறிவிப்புக்கு ஊர்க்காவல் படையினர் வரவேற்பு
போலீசுடன் சேர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வரும் ஊர்க்காவல் படையில், புதிதாக 4,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்படுவதாக, முதல்வர் அறிவித்திருப்பது,' காக்கி' அணியும் கனவிருந்தும் முடியாத இளைஞர்கள் சேவை புரிய உதவியாக இருப்பதுடன், குற்றங்களை குறைக்க போலீசாருக்கு உதவியாகவும் இருக்கும்.
நாட்டை மன்னர்கள் ஆண்டு வந்த காலத்திலேயே, சிறு சிறு நிலப்பரப்புகளில் மக்கள் வாழ்ந்த போது, கொள்ளையர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள, இரவு நேரத்தில் பாதுகாப்பிற்காகவும் அந்தந்த ஊர்களில் உள்ள ஆண்கள் ஒன்றிணைந்து காவல் புரிந்துள்ளனர்.
இதுகுறித்து, ஊர்க்காவல் படை கமாண்டர் ஒருவர் கூறும்போது,'போலீசில் சேர்ந்து காக்கி சட்டை அணிந்து பணியாற்ற முடியாதவர்கள், ஊர்காவல்படையில் சேர்ந்து பணியாற்றுகின்றனர். கடந்த தேர்தலில் மட்டும், சென்னையில் ஆயிரம் பேர் உட்பட தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர். சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்ததை முன்னிட்டு, அடையாறு பகுதியில், போலீசாருடன் சேர்ந்து ஊர்க்காவல் படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டதன் விளைவாக, செயின்பறிப்பு குறைந்தது குறிப்பிடத்தக்கது' என்றார்.
பணிப்படி மாதம் தோறும் கிடைக்குமா? ஊர்க்காவல்படையில் பணியாற்றுபவர்களுக்கு தினப்படி, இரவுப்படி வழங்கப்படுகிறது. இந்த இரண்டு படிகளும் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை என்று ஊர்க்காவல் படை வீரர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து, ஊர்க்காவல் படை வீரர் ஒருவர் கூறும்போது,'மக்களுக்கு சேவை புரியும் எண்ணத்தில் நாங்கள் வந்தாலும், அரசால் வழங்கப்படும் படிகள், எங்கள் குடும்பத்தின் சிறு தேவைகள், வாகனத்திற்கான எரிபொருள் செலவு போன்றவற்றை பூர்த்தி செய்வதற்கு உதவி வருகிறது. இந்த தொகை சரியான நேரத்தில் எங்களுக்கு கிடைப்பதில்லை. இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே வருகிறது. இதுகுறித்து கேட்டால், 'பில்' அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதலாகி வந்தால் தருகிறோம்' என அதற்குரிய எழுத்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதாமாதம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
- கி.கணேஷ் -