ADDED : ஜூலை 30, 2011 04:13 AM
நாகர்கோவில் : சந்தேகத்தின் உச்சகட்டத்தில் மனைவியை உயிரோடு எரித்து கொலை செய்ய முயன்ற கணவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே திருவிதாங்கோடு ஹாஜியார் தெருவை சேர்ந்தவர் சாகுல்ஹமீது (35). இவர் பேக்கரி நடத்தி வருகிறார். இவரது மனைவி பாத்திமா (30).இவர்களுக்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி, இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மனைவி மீது எந்நேரமும் சந்தேகப்பட்ட சாகுல்ஹமீது, பக்கத்து வீட்டில் உள்ளவர்களுடன் பேச தடை விதித்தார். ஒரு கட்டத்தில் பெற்றோர் வீட்டிலும் பேச தடை விதித்தார்.
மேலும், பாத்திமாவை அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று அடித்ததில் மயக்கம் அடைந்த பாத்திமா மீது மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி விட்டார். படுகாயம் அடைந்த அவர் திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் திருவனந்தபுரம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டிடம் கொடுத்த வாக்குமூலத்தில், கணவன் சந்தேகம் காரணமாக தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்ததாக கூறியுள்ளார். தக்கலை போலீசார் சாகுல்ஹமீது மீது வழக்குப்பதிவு செய்தனர்.