/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/களவு சொத்துகள் மீட்பு : மாநகர போலீஸ் அதிரடிகளவு சொத்துகள் மீட்பு : மாநகர போலீஸ் அதிரடி
களவு சொத்துகள் மீட்பு : மாநகர போலீஸ் அதிரடி
களவு சொத்துகள் மீட்பு : மாநகர போலீஸ் அதிரடி
களவு சொத்துகள் மீட்பு : மாநகர போலீஸ் அதிரடி
ADDED : செப் 16, 2011 09:57 PM
கோவை : கோவை மாநகரில் குற்றங்களை தடுக்க புதிய அணுகுமுறைகளை கையாண்ட போலீசார், அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கின்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும், மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் உள்ளிட்ட களவு சொத்துகளை மீட்டுள்ளனர். கோவை மாநகர போலீஸ் எல்லைக்குள் சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளுக்காக 23 ரோந்து ஜீப்கள், 9 சங்கிலி பறிப்பு தடுப்பு ரோந்து பைக்குகள், 33 'ஸ்குவாடுகள்' இயங்குகின்றன. அவ்வாறிருந்தும் கடந்த சில மாதங்களாக திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை குற்றங்கள் அதிகரித்திருந்தன. இதுகுறித்து கமிஷனர் அமரேஷ் புஜாரி, போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, குற்றத்தடுப்பு நடவடிக்கையில் சட்டம் - ஒழுங்கு பிரிவு - குற்றப்பிரிவு போலீசார் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது; தகவல் பரிமாற்றத்தில் பின்னடைவு உள்ளிட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து, போலீசாரின் அன்றாட நடவடிக்கை முறைகளில் பெரும் மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டன. 'க்ரைம் மேப்' தயாரிப்பு: மாநகர எல்லைக்குள் திருட்டு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் தொடர்ச்சியாக நிகழ்ந்த இடங்கள் குறித்த 'க்ரைம் மேப்' தயாரிக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த பகுதிகளை கண்காணிக்க ஜீப் ரோந்து, பைக் ரோந்து, இரவு ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டன. சிறையில் இருந்து வெளிவந்துள்ள மாஜி கிரிமினல்கள் பற்றிய விபரங்கள் ரோந்து போலீசாரிடம் தரப்பட்டு கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டனர். சந்தேகத்துக்குரிய நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தனிப் படைகள் அமைப்பு: குற்றத்தடுப்பு பணிக்காக போலீஸ் ஸ்டேஷன் தோறும் செயல்பட்டு வந்த தனிப்படைகள் கலைக்கப்பட்டு, நான்கு அல்லது ஐந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு தனிப்படை என்ற ரீதியில் சப்-டிவிஷன் தோறும் தலா ஒரு தனிப்படை ஏற்படுத்தப்பட்டது. குற்ற வழக்கு புலன் விசாரணையில் அனுபவம் மிகுந்த போலீசார் இந்த படையில் இணைக்கப்பட்டனர். இதன்காரணமாக, வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்றப்பட்டு, நிலுவை குற்ற வழக்குகளில் தொடர்புடைய கிரிமினல்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள், பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 20க்கும் மேற்பட்ட முக்கிய கிரிமினல்கள் கைது செய்யப்பட்டனர். 'இ- மெயிலில்' தகவல்: பிற மாவட்டங்களில் கிரிமினல்கள் கைது செய்யப்படும்போது, அந்நபர்களுக்கு கோவை வழக்குகளிலும் தொடர்பிருக்க வாய்ப்புள்ளது. ஆனால், அந்த நபர்கள் கைது செய்யப்பட்டது குறித்த தகவல்கள் கோவை போலீசாருக்கு தெரிவிக்கப்படவில்லை. இதனால், பிற மாவட்ட போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள கிரிமினல்களை, கோவை போலீசார் 'வெளியில் தேடும்' நிலை இருந்தது. தகவல் பரிமாற்றங்களில் நிலவிய குளறுபடிகளுக்கு தீர்வுகண்ட போலீஸ் கமிஷனர், கிரிமினல்கள் தமிழகத்தின் எந்த பகுதியில் பிடிபட்டாலும் அதுகுறித்த தகவல்களை அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் குற்ற ஆவண காப்பகங்கள் வழியே கோவை மாநகர போலீசார் 'இ- மெயில்' மூலம் பெறும் வசதிகளை ஏற்படுத்தினார். அதே போன்று, பிற மாவட்ட போலீசாருக்கும் தகவல்கள் பரிமாறப்பட்டன. இதனால், பல வழக்குகளில் குற்றவாளிகள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டனர். கோவை போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி கூறியதாவது:கோவை நகரில் கடந்த மூன்று மாதங்களில் குற்றங்கள் வெகுவாக தடுக்கப்பட்டுள்ளன. போலீசாரின் ரோந்து, 'பீட்' பணிகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டதால் கிரிமினல்களின் ஊடுருவல் ஒடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதத்தில் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான களவு சொத்துகள் கிரிமினல்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி முதல் செப்.,15 வரை 72 சதவீத களவு சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. இவை, கூடிய விரைவில் புகார்தாரர்களிடம் ஒப்படைக்கப்படும். போலீசார் எந்தவொரு பணியை செய்தாலும் அதில் நோக்கம் இருக்க வேண்டும். நோக்கம், லட்சியமின்றி செயல்பட்டால் பலன் இருக்காது. குற்றங்களை தடுக்க வேண்டிய பொறுப்பு சட்டம் - ஒழுங்கு போலீசாருக்கும் உள்ளது. அந்த அடிப்படையில், பாதுகாப்பு நடவடிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்திய காரணத்தால் குற்றங்களை குறைக்க முடிந்தது.இவ்வாறு, கமிஷனர் அமரேஷ் புஜாரி தெரிவித்தார்.