எழும்பூர் கோர்ட் வளாகத்தில் கட்டப்பஞ்சாயத்தா? ஐகோர்ட் நீதிபதி விசாரணை நடத்த ஐகோர்டில் மனு
எழும்பூர் கோர்ட் வளாகத்தில் கட்டப்பஞ்சாயத்தா? ஐகோர்ட் நீதிபதி விசாரணை நடத்த ஐகோர்டில் மனு
எழும்பூர் கோர்ட் வளாகத்தில் கட்டப்பஞ்சாயத்தா? ஐகோர்ட் நீதிபதி விசாரணை நடத்த ஐகோர்டில் மனு
சென்னை : சென்னை, எழும்பூர் கோர்ட் வளாகத்தில், வழக்கறிஞர்கள் சிலர் நடத்தும் கட்டப்பஞ்சாயத்து குறித்து, ஐகோர்ட் நீதிபதியை கொண்டு விசாரணை நடத்தக் கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வியாசர்பாடி எம்.கே.பி., நகரைச் சேர்ந்த நாகூர்கனி, அவரது சகோதரி, தாயார் தாக்கல் செய்த மனு: எழும்பூர் கோர்ட்டில் எங்களுக்கு எதிராக வழக்கு உள்ளது. கோர்ட் அனுப்பிய சம்மனைத் தொடர்ந்து, கடந்த மாதம் 18ம் தேதி அங்கு ஆஜரானோம். எனது சகோதரர் சாதிக் என்பவரை, சில வழக்கறிஞர்கள் சூழ்ந்து கொண்டனர். எங்களுக்கு எதிராக புகார் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக, இந்த வழக்கறிஞர்கள் வந்தனர்.
எனது சகோதரரை ஒரு வழக்கறிஞர் மிரட்டினார். கோர்ட் ஹாலுக்கு வெளியில், நிறைய வழக்கறிஞர்களுக்கு மத்தியில் தான் இச்சம்பவம் நடந்தது. பின், கோர்ட்டில் ஆஜரானோம். வழக்கு விசாரணை சிறிது நேரம் தள்ளிவைக்கப்பட்டது. அப்போது ஒரு வழக்கறிஞர் வந்து, எனது சகோதரர் சாதிக்கிடம் 25 லட்சம் ரூபாய் தந்து, பிரச்னையை தீர்த்துக் கொள்ளுமாறு மிரட்டினார்.
மற்றொரு வழக்கறிஞர், 'நீதியை கோர்ட் வழங்கும் என நினைத்தால் அது தவறு. நாங்கள் தான் போலீஸ். நாங்கள் தான் நீதிபதிகள். எங்களுக்கு எதிராக போலீசாரும், நீதிபதிகளும் கூட வழக்கு பதிவு செய்ய முடியாது. கோர்ட் வளாகத்தில் கொலை நடந்தது கூட அனைவருக்கும் தெரியும். செஷன்ஸ் கோர்ட் கூட எங்களை தண்டிக்க முடியாது. அதனால், பிரச்னையை தீர்த்து விட்டு, வீட்டுக்கு போ' என்றார்.
கோர்ட் ஹால் வெளியில் எனது சகோதரர், குடும்பத்தினரை சில வழக்கறிஞர்கள் திட்டினர். இதையடுத்து, அவர்களை கோர்ட் ஹாலுக்குள் செல்லுமாறு கூறினேன். இதைப் பார்த்த நீதிபதியும், கோர்ட் ஹாலுக்குள் வருமாறு அழைத்தார். போதிய பாதுகாப்பு அளிக்குமாறு போலீசாருக்கும், மாஜிஸ்திரேட் தெரிவித்தார்.
இதற்கிடையில், என்னையும், சகோதரரையும் ஒரு கும்பல் தாக்கியது. இதை எனது சகோதரரின் வழக்கறிஞர் தடுத்தார். உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் வந்து எங்களை அழைத்துச் சென்றனர். அவர்களையும் திட்டினர்.
எங்களுக்கு நடந்த சம்பவம் குறித்து எழும்பூர் போலீசாரிடம் புகார் அளித்தோம். இதனால் எந்த பயனும் இல்லை என அவர் தெரிவித்தார். புகாரை பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினால், இந்த கும்பல் போலீஸ் நிலையத்துக்கு வந்து, பாதிக்கப்பட்டவர்கள் மீது புகார் கொடுக்கும் என கூறினார். மேலும், போலீசாரை நிர்பந்தித்து கைது செய்ய வைப்பர் என்றும், கோர்ட்டுக்கு போனால் எந்த வழக்கறிஞரும் ஜாமின் மனுவுக்கு ஆஜராக மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட்டுக்கும், பதிவாளர் ஜெனரலுக்கும், போலீஸ் கமிஷனருக்கும் புகார் அனுப்பினேன். வழக்கறிஞர் தொழில், சமூகத்தில் மிகவும் உயர்வானது. பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்தியவர்கள் வழக்கறிஞர்கள். அடித்தட்டு மக்களுக்காக பாடுபட்ட வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர்.
எழும்பூர் கோர்ட் வளாகத்தில் நடந்த சட்டவிரோத செயல்களுக்கு, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கோர்ட் வளாகத்தில் நடந்த கிரிமினல் நடவடிக்கைகளுக்கு இதுவரை ஒரு வழக்கறிஞருக்கும் தண்டனை விதிக்கப்படவில்லை. எந்த பயமும் இல்லாமல் கோர்ட்டில் ஒருவர் ஆஜராக முடியவில்லை என்றால், நீதித்துறையின் அடித்தளமே ஆட்டம் காணுவதாக அர்த்தம்.
இந்தச் சூழ்நிலை தொடர்ந்தால், கட்டப்பஞ்சாயத்தை நாடி மக்கள் செல்வர். கட்டுக்கு அடங்காத சில வழக்கறிஞர்களால், போலீசார் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, எழும்பூர் கோர்ட் வளாகத்தில் நடக்கும் கட்டப்பஞ்சாயத்து குறித்து விசாரிக்க, ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும். கோர்ட்டுக்கு பயமின்றி வருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது. மனுதாரர்கள் மூவர் தரப்பில் ஆஜராவதற்கு, 97 வழக்கறிஞர்கள் அடங்கிய பெயர் பட்டியலும், மனுவுடன் இணைக்கப்பட்டுள்ளது.