ADDED : ஆக 09, 2011 02:49 AM
கோவை : கோவை ரயில் நிலையத்தில் பிளாட்பாரத்துக்கு செல்லும் படிக்கட்டுப்பாதை அகலப்படுத்தும் பணி, ரூ.28 லட்சத்தில் முழு வீச்சில் நடக்கிறது.கோவை ரயில் நிலையத்தில், ஐந்து மற்றும் ஆறாவது பிளாட்பாரங்களுக்கு செல்லும் படிக்கட்டுப்பாதை, அகலம் குறுகியதாக இருந்தது.
இதனால் அந்த பிளாட்பாரங்களில் இருந்து இறங்கி கீழே வரும் பயணிகளும், பிளாட்பாரங்களுக்கு செல்லும் பயணிகளும் நெருக்கியடித்துக்கொண்டு செல்லும் நிலை இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக, பிளாட்பாரங்களுக்கு செல்லும் நுழைவுபாதையை அகலப்படுத்தும் பணி, கடந்தாண்டு துவங்கப்பட்டது. தற்போது இந்த பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது.ரயில்வே பொறியாளர் ஒருவர் கூறுகையில், ''ஐந்தாவது மற்றும் ஆறாவது பிளாட்பாரங்களில், படிக்கட்டு நுழைவுபாதையை ரூ.28 லட்சத்தில் மேம்படுத்தும் பணி நடக்கிறது. இந்த பாதை, ஏற்கனவே 2.4 மீட்டர் அகலம் கொண்டதாக மட்டுமே இருந்ததால், பயணிகள் கூட்டம் அதிகமுள்ள காலங்களில் சிரமம் இருந்தது. அதை கருத்தில் கொண்டு, கூடுதலாக 2.1 மீட்டர் அகலத்துக்கு படிக்கட்டு நுழைவுப்பாதை அமைக்கப்படுகிறது. பிளாட்பாரத்தின் கூரை, முகப்பு பகுதியிலும் மேம்பாட்டுப்பணிகள் நடக்கின்றன. செம்மொழி மாநாட்டை முன்னிட்டு துவங்கப்பட்ட இந்த பணிகள் அனைத்தும், இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைந்து விடும்,'' என்றார்.


