ADDED : செப் 16, 2011 11:40 PM
சென்னை: மதுரையில், டேங்கர் லாரி மூலம் கடத்தப்பட்ட, 1,540 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய் பிடிபட்டது.
கடத்திய நான்குபேர் கைது செய்யப்பட்டு, லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகத்தில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும், அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு கள்ளச்சந்தையில் விற்றல், வெளிமாநிலங்களுக்கு கடத்துதல் போன்றவற்றை கண்காணித்து தடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ராதாகிருஷ்ணன் உத்தரவின்படி, ஐ.ஜி., கரன்சின்ஹா மேற்பார்வையில், கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில், நேற்று முன்தினம் அதிகாலை மதுரை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., தலைமையில் தனிப்படையினர், மேலூர் - சிவகங்கை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியே வந்த, டி.என்.59. எச். 6645 எண் கொண்ட டேங்கர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 1,540 லிட்டர் ரேசன் மண்ணெண்ணெய் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை ஓட்டி வந்த கண்ணன், 25, அருண் ஆட்டோமொபைல் கிடங்கு கிளார்க் அழகர், 40, மேலாளர் ஜெயினுலாபுதீன், 51, பணியாளர் ஜாகீர்உசேன், 30 ,ஆகிய நான்கு பேரும், கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ரேசன் மண்ணெண்ணெயை, மேலூரில் உள்ள அருண் ஆட்டோமெபைல் குடோனில் பதுக்கி வைத்திருந்து, மதுரை சிம்மக்கல்லில் உள்ள தியாகராஜா ஆட்டோமொபைல்ஸ் மூலம், கள்ளச் சந்தையில் விற்க அனுப்பப்பட்டது தெரியவந்தது. இந்த மண்ணெண்ணெய்யின் கள்ளச் சந்தை விலை, ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல். தற்போது வரை, ரேஷன் மண்ணெண்ணெய் கடத்தலில் ஈடுபட்டுவந்த முக்கிய குற்றவாளிகள் 12 பேர், குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.