காஞ்சியில் நில அபகரிப்பு வழக்குகள்
காஞ்சியில் நில அபகரிப்பு வழக்குகள்
காஞ்சியில் நில அபகரிப்பு வழக்குகள்
ADDED : ஆக 29, 2011 11:04 PM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும், நில அபகரிப்பு மற்றும் நில மோசடி தொடர்பான புகார்கள், ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தேர்தல் பிரசாரத்தின் போது, அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மோசடியாக அபகரிக்கப்பட்ட நிலங்கள், சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து மீட்கப்பட்டு, நிலத்தின் உண்மையான உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என, ஜெயலலிதா அறிவித்தார்.அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், நிலம் மோசடி தொடர்பானப் புகார்களை விசாரிக்க, மாவட்டம் தோறும், சிறப்பு போலீஸ் பிரிவை துவக்கினார். அனைத்து மாவட்டங்களிலும், நில மோசடி தொடர்பானப் புகார்கள் குவிந்தபடி உள்ளன. தி.மு.க., எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள், தி.மு.க., நிர்வாகிகள் ஏராளமானோர் கைதாகி வருகின்றனர். சிலர், கைதை தவிர்க்க, ஏமாற்றியவர்களுக்கு நிலத்தை திரும்ப கொடுக்க துவங்கி உள்ளனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், நிலம் அபகரிப்பு மற்றும் மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக, காஞ்சிபுரம் எஸ்.பி., அலுவலகத்தில், கடந்த ஜூலையில், தனிப்பிரிவு துவக்கப்பட்டது. புகார் மனுக்களை வாங்க, இரண்டு பேர் நியமிக்கப்பட்டனர். மனுக்கள் உடனடியாக கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டது. மனுக்களை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். நில மோசடி வழக்குகளை விசாரிக்க, தனிப்பிரிவு துவக்கிய பின், புகார் மனுக்கள் குவியத் துவங்கின. தினமும், 30க்கும் மேற்பட்டோர், புகார் மனு கொடுத்து வருகின்றனர். 26ம் தேதி, புகார் மனுக்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது.
கூடுதல் எஸ்.பி., பாஸ்கரன் கூறியதாவது:நிலம் அபகரிப்பு, மோசடி தொடர்பாக, ஏராளமான புகார் மனுக்கள் வந்துள்ளன. 26ம் தேதி வரை, 1050 மனுக்கள் வந்துள்ளன. இவற்றில், 50 மனுக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகார் மனுக்களில், 250 மனுக்கள் சிவில் வழக்கில் உள்ளவை. சில வழக்குகளில், போலீஸ் விசாரணைக்குப் பின், இரு தரப்பினரும் சமாதானமாகி சென்றுள்ளனர். அந்த வகையில், 105 மனுக்கள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், 400 மனுக்கள் விசாரணையில் உள்ளன.புகார் மனு கொடுப்பவர் தரும் ஆவணங்களை, முழுமையாகப் பரிசோதித்த பின்னரே, மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்கிறோம். இதனால், சற்று காலதாமதம் ஏற்படுகிறது. பெரும்பாலும், சிவில் வழக்குகளே வருகின்றன. கோர்ட்டில் வழக்கு உள்ளதால், அவற்றை விசாரிக்க முடியாத நிலை உள்ளது.இவ்வாறு பாஸ்கரன் தெரிவித்தார்