பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் பூந்தமல்லி துணை வட்டாட்சியர் சுற்றிவளைப்பு
பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் பூந்தமல்லி துணை வட்டாட்சியர் சுற்றிவளைப்பு
பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.3,000 லஞ்சம் பூந்தமல்லி துணை வட்டாட்சியர் சுற்றிவளைப்பு
ADDED : செப் 01, 2011 01:56 AM
சென்னை : பட்டா பெயர் மாற்றத்திற்கு 3,000 ரூபாய் லஞ்சம் பெற்ற, பூந்தமல்லி மண்டல துணை பெண் வட்டாட்சியரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர்.போரூர் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவரின் மகன் சந்திரபாபு,35;மணப்பாக்கம் எல் அண்ட் டி.,யில், மிஷின் ஆபரேட்டர்.
இவர், பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் மூன்று கிரவுண்டு இடத்தை, கடந்த மே 23ம் தேதி வாங்கினார். இந்த இடத்திற்குரிய பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய, பூந்தமல்லி வட்டாட்சியர் அலுவலகத்தை சந்திரபாபு அணுகினார்.பட்டா பெயர் மாற்றத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களும் கொடுத்தும், சந்திரபாபுவை பல வாரங்கள் அலையவிட்டனர். இதையடுத்து, பூந்தமல்லி மண்டல துணை வட்டாட்சியர் மீனாட்சியிடம், சந்திரபாபு முறையிட்டார். 4,000 ரூபாய் கொடுத்தால் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார். அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றதும், 1,000 ரூபாயை குறைத்துக் கொண்டு 3,000 ரூபாயை கொடுக்கும்படி, சந்திரபாபுவை மீனாட்சி வற்புறுத்தினார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்திரபாபு, லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., திருநாவுக்கரசு தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரமூர்த்தி, சந்திரசேகரன் ஆகியோர் கொடுத்த ஆலோசனையின்படி, ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை துணை வட்டாட்சியர் மீனாட்சியை சந்தித்து சந்திரபாபு கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மீனாட்சியை கையும் களவுமாக பிடித்தனர். சென்னீர்குப்பத்தில் இருக்கும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தினர். கைதான துணை வட்டாட்சியரை, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.