Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/கீழ்க்கட்டளை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டம் :11 ஆண்டு தூக்கத்தை கலைத்தது வாரியம்

கீழ்க்கட்டளை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டம் :11 ஆண்டு தூக்கத்தை கலைத்தது வாரியம்

கீழ்க்கட்டளை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டம் :11 ஆண்டு தூக்கத்தை கலைத்தது வாரியம்

கீழ்க்கட்டளை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு திட்டம் :11 ஆண்டு தூக்கத்தை கலைத்தது வாரியம்

ADDED : ஆக 03, 2011 01:17 AM


Google News

சென்னை : சென்னை பல்லாவரத்தை அடுத்த கீழ்க்கட்டளையில் நிலம் கையகப்படுத்த உத்தேசித்த வழக்கில், ஏற்கனவே ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு, 11 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேல் முறையீடு செய்வதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இப்பிரச்னையில் தமிழக முதல்வர் தலையிட்டு சுமூக தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது. பல்லாவரம் நகராட்சிக்குட்பட்ட கீழ்க்கட்டளையில் வீட்டு வசதி வாரிய திட்டத்திற்காக, கடந்த 1990ல் 56.57 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வீட்டு வசதி வாரியத்தின் அறிவிப்பு வெளியானதும், நில உரிமையாளர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில், தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட் இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. இழப்பீடு நிர்ணயம்: இத்திட்டத்திற்கு கடந்த 1993ல் நில இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.



இழப்பீட்டுத் தொகையாக 53 லட்சம் ரூபாய் பணத்தை, அதிகாரிகள் பூந்தமல்லி சார்பு கோர்ட்டில் செலுத்தினர்.

நில உரிமையாளர்கள் கோர்ட்டில் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது. ஆனால் பணத்தை யாரும் பெறவில்லை. இந்த வழக்கில், 1999ல் சென்னை ஐகோர்ட்டில் வெவ்வேறு நீதிபதிகள், வீட்டு வசதி வாரியத்தின் ஆணை செல்லாது என்று தனித்தனியாக தீர்ப்பு வழங்கினர். இதைத்தொடர்ந்து மேலும் பலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஒரு வழக்கில், ஐகோர்ட் நீதிபதி பட்டுடு, முந்தைய வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு இந்த வழக்குக்கும் பொருந்தும் என, 2006ல் தீர்ப்பளித்தார். நிலைமை இவ்வாறிருக்க, 2007ம் ஆண்டு வரை, இந்த நிலங்களுக்கு பத்திரப்பதிவு, கட்டட வரைபட அனுமதி, பட்டா மாற்றம், மின்சார இணைப்பு. சாலை வசதி, பாதாளச் சாக்கடை வசதி அனைத்தும் வழங்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான வீடுகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் கட்டப்பட்டன.



இதற்கிடையே, 2007ல் முதல் வீட்டு வசதி வாரிய அறிவிப்பு வெளியிடப்பட்ட இடத்தில் பத்திரப்பதிவு, மின்இணைப்பு நிறுத்தப்பட்டது.திருப்பம் ஏற்படுத்திய தீர்ப்பு: இதை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் 2009ம் ஆண்டு அப்பீல் செய்தது. இதை விசாரித்த பெஞ்ச், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நில இழப்பீட்டுத் தொகை அறிவித்த பிறகு வழக்கு தொடர்ந்ததால், அந்த வழக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றும், முந்தைய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தது. தங்களுக்கு சாதகமான இந்த உத்தரவை தொடர்ந்து, 1993ம் ஆண்டுக்கு முன்பு தொடரப்பட்டு 1999ல் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளுக்கும், வீட்டுவசதி வாரியம் தற்போது அப்பீல் செய்துள்ளது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்டோருக்கு மீண்டும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.



இதனால் இப்பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.மக்கள் முயற்சி:முந்தைய தி.மு.க., ஆட்சியில் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சம்பந்தப்பட்ட துறை அமைச்சரையும், உள்ளூர் அமைச்சராக இருந்த அன்பரசனையும் மக்கள் பலமுறை சந்தித்தனர். ஆனால், பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக உறுதி அளிக்கப்பட்டதே தவிர, எந்த பயனும் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'நாங்கள் கோர்ட்டில் பெற்ற உத்தரவை எதிர்த்து வீட்டு வசதி வாரியம் 11 ஆண்டுகளுக்கு பிறகு அப்பீல் செய்வது வேடிக்கையாக உள்ளது. இத்திட்டம் அறிவிக்கும் போது கீழ்கட்டளையில், பெரும்பாலான இடங்கள் விவசாய நிலமாக இருந்தது. தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளாக உள்ளன.



இவற்றை இடித்துவிட்டு, வீட்டு வசதி வாரியம் புதிய வீடுகளை கட்டுவதற்கு பதிலாக, மாற்று ஏற்பாடுகளை செய்யலாம்.மேலும், 1990ம் ஆண்டு திட்டம் அறிவித்த போது விதி முறைகளை செயல்படுத்தாமல், 2007ம் ஆண்டு முதல் விதி முறைகளை அமல்படுத்தியது எந்த விதத்தில் நியாயம். இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களது நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் நிறைவேற்றுவார் என ஏங்கி காத்துக் கொண்டிருக்கிறோம்,' என்றனர். இது தொடர்பாக கேட்டபோது, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள்,''வழக்கு கோர்ட் விசாரணையில் இருப்பதால், இந்த பிரச்னை குறித்து, இப்போது கருத்து கூறுவது உகந்ததாக இருக்காது'' என்று தெரிவித்தனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us