Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அனுப்பட்டியில் பஸ்கள் சிறைபிடிப்பு

அனுப்பட்டியில் பஸ்கள் சிறைபிடிப்பு

அனுப்பட்டியில் பஸ்கள் சிறைபிடிப்பு

அனுப்பட்டியில் பஸ்கள் சிறைபிடிப்பு

ADDED : ஜூலை 29, 2011 11:48 PM


Google News
பல்லடம் : 'சரியான நேரத்தில் பஸ்களை இயக்க வேண்டும்; தனியார் பஸ்களில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்,' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, அனுப்பட்டி பொதுமக்களும், மாணவர்களும், நேற்று பஸ்களை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

பல்லடம் ஒன்றியம் அனுப்பட்டியில் இருந்து தினமும் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட 300 பேர், பல்லடம், திருப்பூர், கரடிவாவி ஆகிய பகுதிகளுக்கு சென்று திரும்புகின்றனர். அனுப்பட்டிக்கு வரும் அரசு பஸ் '105 ஏ' சரியான நேரத்துக்கு வராததை கண்டித்தும், தனியார் பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை கண்டித்தும், நேற்று காலை 6.15 மணிக்கு அனுப்பட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், அங்குள்ள பஸ் ஸ்டாப் அருகே திரண்டிருந்தனர். அனுப்பட்டிக்கு வந்த 105ஏ, 30ம் எண்ணுள்ள அரசு பஸ், 23ம் எண்ணுள்ள தனியார் பஸ்களை சிறைபிடித்தனர். நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த காமநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி,''சாலை மறியலை கை விடுங்கள்; உங்கள் பிரச்னை குறித்து போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணலாம்,'' என்றார். அப்போது, 'அனுப்பட்டிக்கு சரியான நேரத்துக்கு அரசு பஸ்கள் வர வேண்டும்; தனியார் பஸ்கள், கூடுதலாக கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்; 105ஏ பஸ் காலை 6.30 மணிக்கே வருவதால், கரடிவாவி, பல்லடம் செல்லும் மாணவ, மாணவியர் காலை உணவையும் பள்ளிக்கு எடுத்துச் சென்று சாப்பிடும் நிலை உள்ளது. எனவே, காலை 6.30 மணி என்பதை 7.30 ஆக மாற்ற வேண்டும். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே மறியலை கைவிடுவோம்,' என்றனர்.தனியார் பஸ் டிரைவரிடம் பேசிய இன்ஸ்பெக்டர், 'உங்கள் இஷ்டம் போல் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. கட்டண உயர்வுக்கு வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளதா? அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் கட்டணம் உயர்த்தியது தவறு. அனுமதி வாங்கும் வரை பழைய கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்,' என கண்டிப்புடன் தெரிவித்தார். அரசு போக்குவரத்து கழக பல்லடம் கிளை துணை மேலாளர் சந்திரசேகர்,''அனுப்பட்டிக்கு இனி சரியான நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படும். காலை 6.30 மணி என்பது 7.30 ஆக மாற்றப்படும். தனியார் பஸ் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவியுங்கள்,'' என்றார்.இப்பதிலால் சமாதானம் அடைந்த பொதுமக்கள், காலை 7.35 மணிக்கு பஸ்களை விடுவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us