Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசின் திட்டங்களால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் :அமைச்சர் சண்முகவேலு பேச்சு

அரசின் திட்டங்களால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் :அமைச்சர் சண்முகவேலு பேச்சு

அரசின் திட்டங்களால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் :அமைச்சர் சண்முகவேலு பேச்சு

அரசின் திட்டங்களால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் :அமைச்சர் சண்முகவேலு பேச்சு

ADDED : செப் 18, 2011 09:35 PM


Google News
திருப்பூர் : ''தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களால், பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள கிராமப்புற மக்கள், விரைவில் முன்னேற்றம் அடைவர்,'' என ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு பேசினார். அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் விழா, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. ஊரக தொழில் துறை அமைச்சர் சண்முகவேலு பேசியதாவது: கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில், தமிழக முதல்வர் பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா பொருட்களை வழங்குகிறார். இளம் தலைமுறையினர் மேம்படும் வகையில், பள்ளி மாணவ, மாணவியருக்கு 'லேப்டாப்' மற்றும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. பெண் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், திருமண உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது; மாங்கல்யம் செய்வதற்காக, தங்க காசு வழங்கப்படுகிறது. அறிவாற்றலை பெருக்கும் வகையில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில், உலகத்தில் எந்த நாட்டு தலைவர்களும் செய்யாத சாதனை திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியுள்ளார். தொலைநோக்கு பார்வையுடன் வழங்கப்பட்ட 'லேப்டாப்' மூலமாக, கிராமப்புற மாணவர்களின் வாழ்க்கை தரம் மேம்படும். பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள கிராமப்புற மக்கள் விரைவில் முன்னேற்றம் அடைவர், என்றார்.கலெக்டர் மதிவாணன் பேசும்போது,

''மனித வாழ்வுக்கு செல்வ வளம் அத்தியாவசியம். தமிழக அரசு வழங்கும் சலுகைகள் மூலமாக, மாணவ, மாணவியர் கல்விச்செல்வத்தை பெருக்கிக் கொள்ளலாம். ''எதிர்காலத்தில், பல்வேறு செல்வ வளங்களையும் ஒருசேர பெற்று வாழலாம். தற்போது பெறும் கல்வி செல்வம் மூலமாக, எதிர்காலத்தில், வீடும், சமுதாயமும் போற்ற பணியாற்ற முடியும். அரசு சலுகைகளை முறையாக பயன்படுத்தி, மாணவர்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள வேண்டும்,'' என்றார்.எம்.பி., சிவசாமி பேசுகையில்,''வீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே நாடு முன்னேறும். அதற்காகவே, குழந்தைகள், பள்ளி கல்வி, உயர்கல்வி, திருமணம், மகப்பேறு என பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்குகிறார். ஒரு நாட்டின் வளர்ச்சியை கணக்கிடும்போது, கல்விச்செல்வம் என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இடைநிற்றலை தவிர்க்கும் வகையில், பள்ளி கல்விக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.''திருப்பூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை எடுத்து, கடந்த 2001-06 அ.தி.மு.க., ஆட்சியில்தான் புதிய பள்ளிகள் கட்டப்பட்டன. அப்போது செய்யாமல் விட்டிருந்தால், தி.மு.க.,வினர் தற்போது 'சைட்' போட்டு விற்றிருப்பார்கள். தமிழக முதல்வர் எங்கும் இல்லாத வகையில், கல்விக்காக அதிக திட்டங்களை நிறைவேற்றுகிறார். மனிதன் எவ்வளவு சம்பாதித்தாலும், கடைசி வரை உடன் இருந்து பயனளிக்கும் செல்வம் கல்வி மட்டுமே,'' என்றார்.எம்.எல்.ஏ., ஆனந்தன் பேசுகையில்,''மாணவ, மாணவியரின் வருங்காலம் வளமாக அமைய, தொலைநோக்கு பார்வையுடன் சீரிய சிந்தனையுடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ''தமிழகத்தை முன்னோடி மாநிலமாக மாற்றும் திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். அவற்றை முறையாக பயன்படுத்தி, இளம் தலைமுறையினர் மேம்பட வேண்டும். தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக முன்னேற்ற அனைவரும் முழு முயற்சி எடுக்க வேண்டும். மாணவர்கள் நலனுக்காக புதிய பஸ் வழித்தடங்கள் துவக்கப்பட உள்ளன,'' என்றார். மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியன், ஒன்றிய தலைவர் தங்கராஜ், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் நடராஜ், பி.டி.ஏ., தலைவர் ஸ்டீபன்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் நன்றி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us