ADDED : ஜூலை 15, 2011 12:47 AM
கோபிசெட்டிபாளையம்: வழக்கில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, கோபி ஜே.எம்., நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
பெருந்தலையூர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி மகன் பொன்னுசாமி(47). இவரது மைத்துனர் மகேஸ்வரன். இவர்கள் இருவரும் கடந்த 2008 ஜூலை 7ம் தேதி கவுந்தபாடி-பெருந்தலையூர் சாலையில் பைக்கில் சென்றார். பின்னால் வந்த கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரி மோதியது. விபத்தில் பொன்னுசாமி இறந்தார். மகேஸ்வரன் காயம் அடைந்தார். இது தொடர்பாக கவுந்தபாடி ஸ்டேஷனில் அப்போது இன்ஸ்பெக்டராக இருந்த ராஜா ரணவீரன், வழக்கு பதிவு செய்து விசாரித்தார். கோபி ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. வழக்கில் இன்ஸ்பெக்டர் ராஜாரணவீரன் ஆஜராக பல முறை அழைப்பு விடுத்தும் இதுவரை ஆஜராகவில்லை. எனவே, இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி இருதயராணி உத்தரவிட்டார். நாமக்கல் மாவட்டம் நல்லிபாளையத்தில் தற்போது இன்ஸ்பெக்டராக ராஜாரணவீரன் பணியாற்றுகிறார்.