/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/கொள்முதல் நிலையங்களில் 1,000 டன் நெல் தேக்கம்கொள்முதல் நிலையங்களில் 1,000 டன் நெல் தேக்கம்
கொள்முதல் நிலையங்களில் 1,000 டன் நெல் தேக்கம்
கொள்முதல் நிலையங்களில் 1,000 டன் நெல் தேக்கம்
கொள்முதல் நிலையங்களில் 1,000 டன் நெல் தேக்கம்
ADDED : செப் 14, 2011 01:10 AM
கோபிசெட்டிபாளையம் : கோபி பகுதியில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் பதர் பிரிப்பதில் தாமதம் ஏற்படுவதால், 1,000 டன் நெல் தேக்கமடைந்துள்ளது.தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசனப் பகுதிக்குட்பட்ட பொலவகாளிபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், டி.என்.பாளையம், காசிபாளையம், அத்தாணி, புதுக்கரைபுதூர், கள்ளிப்பட்டி, கூகலூர் ஆகிய ஒன்பது இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
சன்ன ரகத்துக்கு கிலோ 11 ரூபாய், குண்டு ரகத்துக்கு 10.50 ரூபாய் வழங்கப்படுகிறது.நடப்பாண்டு கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய பகுதியை சேர்ந்த வெளிமாநில வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்ய வரவில்லை. இதனால், அரசு கொள்முதல் நிலையங்களுக்கு அதிகளவில் நெல் மூட்டைகள் வரத்தாகிறது.விவசாயிகள் கொண்டு வரும் நெல் முழுவதும், கொள்முதல் நிலையத்தில் உள்ள, 'வினோயிங் மிஷின்' மூலம் பதர் நீக்கப்பட்ட பிறகே, கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், கொள்முதல் தாமதமாகிறது.கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் வரை நெல் மூட்டைகள் வைத்துள்ளனர். நெல் அறுவடைப் பணி தீவிரம் அடைந்துள்ளதால், கொள்முதல் நிலையங்களுக்கு நெல் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், நெல் மூட்டைகள் வைக்க போதிய இட வசதி இல்லாததால் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.கொள்முதல் நிலையகளுக்கு வந்த நெல் மூட்டைகளை ஆங்காங்கே அடுக்கி வைத்து தார்ப்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது. உடனடியாக, கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் தினசரி கொள்முதல் நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.சென்ற 12 நாட்களில், கூகலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் 117.8 டன், நஞ்சகவுண்டன்பாளையம் 82.12 டன், பொலவகாளிபாளையம் 64.68 டன், டி.என்.பாளையம் 145.08 டன், கள்ளிபட்டி 59.92 டன், காசிபாளையம் 75.16 டன், புதுவள்ளியாம்பாளையம் 107.48 டன், புதுக்கரைபுதூர்(ஏழுர்) 83.32 டன், அத்தாணி 74.84 டன் என மொத்தம் 810 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், 1,000 டன் வரை பதர் நீக்குவதற்காக கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக பணம் பெற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது:ஐந்து நாட்களுக்கு முன் கொண்டு வந்த நெல் மூட்டைகள் கூட விற்பனையாகாமல் காத்திருப்பில் உள்ளது. சீனியாரிட்டி படி எங்கள் நெல் கொள்முதல் செய்யப்படும். நெல் மூட்டைகளில் பதர் அதிகளவில் உள்ளது என, 'வினோயிங் மிஷின்' மூலம் பதர் நீக்கப்படுகிறது.ஒரு மூட்டை நெல் பதர் நீக்க ஏழு ரூபாய், கூலியாட்களுக்கு தனியாக ஐந்து ரூபாய் தர வேண்டியுள்ளது. ஒரு மூட்டை நெல் பதர் நீக்க மூன்று நிமிடமாகிறது. ஒரு நாளைக்கு 700 மூட்டை வரைதான் பதர் நீக்க முடியும். விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை உடன் விற்க முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்தபட்சம் 100 டன் நெல் தேக்கமடைந்துள்ளது.கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக, 'வினோயிங் மிஷின்' வைத்து, பதர் நீக்க நடவடிக்கை எடுத்தால், தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகளை உடனடியாக விற்க வசதியாக இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.