/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விவசாய பயிர்களை காக்க நடவடிக்கை:வனத்துறை அமைச்சர் தகவல்விவசாய பயிர்களை காக்க நடவடிக்கை:வனத்துறை அமைச்சர் தகவல்
விவசாய பயிர்களை காக்க நடவடிக்கை:வனத்துறை அமைச்சர் தகவல்
விவசாய பயிர்களை காக்க நடவடிக்கை:வனத்துறை அமைச்சர் தகவல்
விவசாய பயிர்களை காக்க நடவடிக்கை:வனத்துறை அமைச்சர் தகவல்
ADDED : ஆக 01, 2011 10:26 PM
மேட்டுப்பாளையம் : ''வனவிலங்குகளால் விவசாய பயிர்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் கல்லாறு, நெல்லித்துறை ஆகிய பகுதிகளில் பல லட்சம் பாக்கு மரங்களும், ஆயிரக்கணக்கான தென்னை மரங்களும் உள்ளன. தென்னையின் குருத்து பகுதியும், பாக்கு மரத்தின் நடுப்பகுதியில் உள்ள சோறு போன்ற பகுதியும் யானைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாகும். அதனால் யானைகள் பாக்கு மற்றும் தென்னை மரங்களை அழித்து வருகின்றன. கல்லாறு பகுதியில் கடந்த இரண்டு ஆண்டில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் அழிந்துள்ளன. இது நீண்டகால பணப்பயிர் என்பதால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. யானைகள் தாக்கியதில் பலர் உயிர் இழந்துள்ளனர். அதனால் இரவு காவல் பணிக்கு யாரும் வர மறுக்கின்றனர். இதே நிலை தொடர்ந்து நீடித்தால் பாக்கு விவசாயம் அழிந்து விடுமோ என்ற அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊட்டி மெயின் ரோட்டில் ஜல்லிமேடு என்ற இடத்தில் தனியார் தோட்டத்தில், இரவில் 5 யானைகள் புகுந்து 10 பாக்கு மரங்கள், 4 தென்னை மரங்களை உடைத்து கீழே தள்ளின. இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் வனத்துறையினரிடம் கூறினர். தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால், தொழில்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர், மேட்டுப்பாளையத்தில் கல்லாறு பகுதியில் யானைகளால் சேதமடைந்த பாக்கு, தென்னை மற்றும் மாந்தோப்புகளை பார்வையிட்டனர். அப்போது வனத்துறை அமைச்சர் பச்சைமால் நிருபர்களிடம் கூறியதாவது: வனவிலங்குகளால் சேதமடைந்த பகுதிகளை பார்த்து அறிக்கை வழங்கும்படி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் பேரில் கோவை மாவட்டத்தில் வனப்பகுதி ஓரத்தில் உள்ள விவசாய நிலங்களை அதிகாரிகள் குழுவுடன் பார்வையிட்டேன். அனைத்து பகுதிகளையும் பார்த்த பின்பு, பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் அறிக்கை வழங்கப்படும். இனிவரும் காலங்களில் வனவிலங்குகளால் விவசாய பயிர்களுக்கு சேதங்கள் ஏற்பாடாத வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அமைச்சர் பச்சைமால் கூறினார். அமைச்சருடன் எம்.எல்.ஏ.க்கள் சின்னராஜ், ஆறுக்குட்டி, மண்டல வனப்பாதுகாவலர் கந்தசாமி, மாவட்ட வன அலுவலர் திருநாவுக்கரசு உட்பட வனத்துறை அதிகாரிகள் உடன் வந்தனர். ரேஞ்சர்கள் தன்னப்பன், தேசப்பன், தினேஷ்குமார், நசீர் ஆகியோர் சேதப்பகுதிகளை காண்பித்து விளக்கினர்.