Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/தரையிறங்கும் விமானங்களுக்கு பறவைகளால் ஆபத்து: ரன்வே அருகில் குப்பை குவிவதால் சிக்கல்

தரையிறங்கும் விமானங்களுக்கு பறவைகளால் ஆபத்து: ரன்வே அருகில் குப்பை குவிவதால் சிக்கல்

தரையிறங்கும் விமானங்களுக்கு பறவைகளால் ஆபத்து: ரன்வே அருகில் குப்பை குவிவதால் சிக்கல்

தரையிறங்கும் விமானங்களுக்கு பறவைகளால் ஆபத்து: ரன்வே அருகில் குப்பை குவிவதால் சிக்கல்

ADDED : அக் 07, 2011 12:54 AM


Google News

சென்னை விமான நிலையத்தில் உள்ள ரன்வே அருகில் ஏராளமான குப்பை குவிவதால், அங்கு இரை தேடி ஏராளமான பறவைகள் வருகின்றன.

இதனால், விமானம் தரையிறங்கும் போது பறவைகள் மோதி விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலையத்திற்கு தினசரி சராசரியாக 375 விமானங்கள் வந்து செல்கின்றன. விமானங்கள் தரையிறங்குவதையும், மேல் எழும்புவதையும் விமான நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை கண்காணிக்கிறது. ஒரு விமானம் சென்னை விமான நிலைய வான் எல்லைக்குள் வந்ததும், அதன் பைலட் விமானத்தை தரையிறக்க கட்டுபாட்டு அறையிடம் அனுமதி கேட்பார். 'ரன்வே' கிளியராக இருந்தால், குறிப்பிட்ட விமானம் தரையிறங்க அனுமதி கிடைக்கும். இதையடுத்து, விமானம், பறக்கும் உயரத்தை குறைந்துக் கொண்டு, ரன்வே நோக்கி வரும். பின், 'லேண்ட்' ஆகி விமான நிறுத்தத்திற்கு செல்லும்.



பறவைகளால் விபத்து: பொதுவாக, பறவைகள் அதிக உயரத்தில் பறக்காது. இரை தேடுவதற்காக, தரையில் இருந்து குறைந்த அளவிலான உயரத்திலேயே பறக்கும். விமானங்கள் தரையிறங்குவதற்காக அதன் பறக்கும் உயரத்தை குறைக்கும் போது, வானில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள் விமானத்தின் மோதி, இன்ஜினில் சிக்கும். அதுபோன்ற நேரங்களில், விமானம் விபத்தை சந்திக்க நேரிடும். பறவைகள் மோதி பல விபத்துக்கள் நடந்துள்ளன. பல நேரங்களில், 'டேக் ஆப்' ஆகும் விமானங்களில் பறவைகள் மோதியதால், அந்த விமானங்களின் புறப்பாடே ரத்து செய்யப்பட்டுள்ளது. பறவைகளால் ஏற்படும் விபத்தை தடுக்க விமான நிலைய ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. விமானங்கள் தரையிறங்கும் போதும், 'டேக் ஆப்' ஆகும் போதும், சென்னை விமான நிலையத்தின் வான்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பறவைகளை விரட்ட ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், குறிப்பிட்ட நேர இடைவெளியில் வெடிகளை வெடித்து, பறவைகளை விரட்டுவார்கள்.



குப்பையால் அபாயம்: அடுத்ததாக, குப்பை தான் பறவைகளை கவர்கின்றன என்பதால், விமான நிலையத்தை சுற்றி குப்பை சேராமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பைகளை கொட்ட கூடாது என்று விதியே உள்ளது. ஆனால், இந்த விதிமுறைகள் முறையாக பின்பற்றுவதில்லை. சென்னை விமான நிலைய வளாக குடியிருப்பு பகுதியில், ஒரு கல்யாண மண்டபம் உள்ளது. இங்கு விழாக்கள் நடக்கும் போது வெளியேற்றப்படும் உணவு கழிவுகள் அருகிலேயே கொட்டப்படுகின்றன. இதனால், பறவைகள் அதிகமாக அப்பகுதியில் திரிகின்றன. இந்நிலையில், விமானங்கள் தரையிறங்கும் ரன்வே அருகே தற்போது ஏராளமான அழுகிய உணவுக் கழிவுகள் கொட்டப்படுகின்றன.



ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து ஆலந்தூர், சிமென்ட்ரி சாலை பிரியும் இடத்தில், விமான நிலைய காம்பவுண்ட் சுவரை ஒட்டி, ரன்வே துவங்கும் இடமருகே இந்த குப்பைகுவிந்துள்ளது. இந்த குப்பையில் உள்ள கழிவுகளை உண்பதற்காக ஏராளமான காகங்களும், கழுகுகளும் வருகின்றன. இவ்வாறு வரும் பறவைகள், ரன்வே அருகில், வான் வெளியில் வட்டமடிக்கின்றன.இதனால், தரையிறங்கும் விமானங்கள் மற்றும் புறப்படும் விமானங்கள் பறவைகளால் தாக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ''விமான நிலையத்தை சுற்றி, ஜி.எஸ்.டி., சாலை ஓரங்களில் ஏராளமான ஓட்டல்கள், டீ கடைகள் உள்ளன. இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இங்கு கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. விமான நிலைய ஆணையமோ, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்களோ இதை கண்டு கொள்ளாத நிலை நீடிக்கிறது'' என்றார் விமான நிலைய ஊழியர் ஒருவர்.



- எஸ்.உமாபதி -







      Our Apps Available On




      Dinamalar

      Follow us