சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா, இளவரசி ஆஜர்
சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா, இளவரசி ஆஜர்
சொத்து குவிப்பு வழக்கு: சசிகலா, இளவரசி ஆஜர்

தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கு, பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், சாட்சிகள் அனைத்தும் விசாரித்து முடிக்கப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே, ஆஜராக வேண்டியுள்ளது. அவர்கள், இம்மாதம், 27 ம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இதற்கிடையில், ஜெ., தரப்பில், ஜெயலலிதா முதல்வராகவுள்ளார். அவருக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அவரது பாதுகாப்புக் கருதி, அவரிடம் கேட்கும் கேள்விகளை, ஸ்டேட்மென்டாக பெற்றுக் கொள்ள வேண்டும், அல்லது அவரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதில் பெறவேண்டும் என, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, பெங்களூரு சிறப்புக் கோர்ட்டில், நீதிபதி மல்லிகார்ஜூனய்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் சசிகலா, இளவரசி ஆகியோர் ஆஜராயினர்.
நீதிபதி: குற்றம் சாட்டப்பட்டவர்களில் சுதாகரன் ஏன் ஆஜராகவில்லை.
சுதாகரன் வழக்கறிஞர் சரவணகுமார்: 'சுதாகரனுக்கு உடல்நிலை சரியில்லை' என்று ஆதாரங்களுடன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, ஜெ., தரப்பு கேட்ட அனுமதிக்கு, எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தார்.
ஜெ., வழக்கறிஞர் குமார்: விதி 313(1) ஐ பயன்படுத்தி குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என, அரசு வழக்கறிஞர் கூறுகிறார். 2008 ம்ஆண்டில் குற்றவியல் நடைமுறை சட்டத் திருத்தம் 313(5)ன் படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டியதில்லை. அவர்கள் ஸ்டேட்மென்ட் மூலம் தன் பதிலைத் தரலாம் என கூறப்பட்டுள்ளது. இதன் படி ஆந்திரா, மும்பை ஐகோர்ட்டுகள் தீர்ப்பு வழங்கியுள்ளன.
சட்டத் திருத்தம் கொண்டு வந்தது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காகவே தவிர, கோர்ட்டிற்கு அல்ல. இதனால், கோர்ட் குற்றம் சுமத்தப்பட்டவரை நேரில் ஆஜராகச் சொல்ல அதிகாரம் இல்லை. காலை 11 மணியிலிருந்து 1.20 வரை, தொடந்து ஜெ.,வழக்கறிஞர் வாதிட்டார். அதன் பின்னரும், தன் வாதத்தைத் தொடர அனுமதி கேட்டார்.
அதற்கு நீதிபதி, இந்த மனு மீதான வாதத்தை ஆகஸ்ட் முதல் தேதியன்று தொடரலாம் எனக் கூறி ஒத்தி வைத்தார்.
பெங்களூரில் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கிருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், காலை 10.55 மணிக்கு கோர்ட்டிற்கு வந்தனர். கறுப்பு நிற உடையணிந்த, பத்துக்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள், சூழ்ந்த படி அவர்களை அழைத்து வந்தனர்.
இருவரும் கோர்ட்டில் கூண்டில் ஏறி நின்றனர். நீதிபதி வந்து அமர்ந்தவுடன், நின்று கொண்டிருந்த சசிகலா, இளவரசியை, கோர்ட் அலுவலர் அமரச் சொன்னவுடன், இருவரும் அமர்ந்தனர். பகல் 12 மணியளவில், சசிகலா, இளவரசி கோர்ட்டில் இருக்க வேண்டுமா என்று ஜெ., வழக்கறிஞர் கேட்டார். அதற்கு நீதிபதி, அவர்களுக்கு உடல் நிலையில் ஏதாவது பிரச்னை உள்ளதா என்று கேட்டார்.
இல்லை என்று வழக்கறிஞர் கூறியவுடன், கோர்ட் முடியும் வரை இருக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கோர்ட் கூண்டுக்குள் இருந்த இருவருக்கும், அவர்களின் ஆதரவாளர்கள் தண்ணீர் பாட்டில் கொடுத்தனர். ஆனாலும், அவர்கள் இருவரும் கடைசி வரை தண்ணீர் குடிக்கவில்லை.
முற்பகல் 11 மணியிலிருந்து பகல் 1.20 வரை, கூண்டில் அமர்ந்திருந்த இருவரும் அவ்வப்போது பேசியவாறு கேஷுவலாக இருந்தனர். சசிகலா ஆஜரானதால், இதுவரை இல்லாத அளவில், கர்நாடக அ.தி.மு.க.,வினரும், தமிழகத்தில் இருந்து ஏராளமான வழக்கறிஞர்களும் கோர்ட்டிற்கு வந்திருந்தனர். கோர்ட் வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.