நத்தக்காடையூரில் பொதுமக்கள் மறியல்
நத்தக்காடையூரில் பொதுமக்கள் மறியல்
நத்தக்காடையூரில் பொதுமக்கள் மறியல்
ADDED : ஆக 11, 2011 11:52 PM
காங்கேயம்: ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்காததால், பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டித்து, நத்தக்காடையூரில் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காங்கேயம், நத்தக்காடையூருக்கு கொடுமுடி காவிரியாற்றிலிருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. பழையகோட்டை, வெள்ளியம்பாளையம், வசந்தம்நகர், முத்தூர் ரோடு, தோப்புகாடு, நாச்சிமுத்து நகர், மருதுறை ரோடு மற்றும் சுற்றுப்பகுதிகளில் ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இப்பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். காவிரியாற்றில் பத்தாயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்ற போதும், இப்பகுதிக்கு தொடர்ந்து குடிநீர் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து அலுவலகத்தில், குடிநீர் கேட்டு முறையிட்டும் பயனில்லை. ஆவேசமடைந்த நூற்றுக்கணக்கான பெண்கள், நேற்று காலை 9 மணிக்கு நத்தகாடையூர் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பஞ்சாயத்து நிர்வாகத்திலிருந்து முறையான பதில் இல்லை. நத்தகாடையூரில் ஈரோடு - பழநி ரோட்டில் அமர்ந்து மறியல் போராட்டத்தை துவக்கினர். பஸ்களும், பிற வாகனங்களும் வரிசையாக நின்றன. காங்கேயம் துணை பி.டி.ஓ., ஹரிஹரன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பெண்களும் மறியலை கைவிட்டனர்.