/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/மாவட்ட துணை சுகாதார நிலையங்களால் பலனில்லை நர்சுகள் தங்காததால் நோயாளிகள் அவதிமாவட்ட துணை சுகாதார நிலையங்களால் பலனில்லை நர்சுகள் தங்காததால் நோயாளிகள் அவதி
மாவட்ட துணை சுகாதார நிலையங்களால் பலனில்லை நர்சுகள் தங்காததால் நோயாளிகள் அவதி
மாவட்ட துணை சுகாதார நிலையங்களால் பலனில்லை நர்சுகள் தங்காததால் நோயாளிகள் அவதி
மாவட்ட துணை சுகாதார நிலையங்களால் பலனில்லை நர்சுகள் தங்காததால் நோயாளிகள் அவதி
ADDED : செப் 16, 2011 03:39 AM
திருவள்ளூர்:மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையங்களில், கிராம நர்சுகள் தங்காததால், பல கோடி ரூபாய் அரசுப் பணம் வீணாகியுள்ளது; பொதுமக்களும் உடனடி சிகிச்சை பெற முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். துணை சுகாதார நிலையங்கள் மாட்டுத் தொழுவமாகவும், சமூக விரோதச் செயல்கள் நடைபெறும் கூடாரங்களாகவும் மாறி உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் 44 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 303 துணை சுகாதார நிலையங்களும் உள்ளன. மொத்தம் 178 டாக்டர்களும், 429 நர்சுகளும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டும் நல்ல முறையில் இயங்கி வருகின்றன.இதேபோல் மாவட்டத்தில், 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதிக்கு ஒரு கிராம நர்ஸ் என பணியிடம் உள்ளது. இவர்களுக்கென துணை சுகாதார நிலையமும், பல லட்சம் மதிப்பீட்டில் அரசு கட்டிக் கொடுத்தது. இக்கட்டடங்களில் நர்சுகள் தங்கி கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். .
மேலும், கிராமங்களில் உள்ள கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடுதல்
உட்பட பல பரிசோதனைகளையும், பிரசவத்துக்கு பிறகு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து, தடுப்பூசி போடும் பணியையும் செய்ய வேண்டும்.
அங்கு தங்கியிருந்து பிரசவத்தையும் பார்க்க வேண்டும். நோயாளிகள் கிராம நர்சை தொடர்பு கொள்ள அவர்களுக்கு இலவச சிம் கார்டுடன் மொபைல் போனையும் அரசு வழங்கியுள்ளது. அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.ஆனால் பல கிராமங்களில் நர்சுகள் தங்குவதில்லை. இதனால் கர்ப்பிணிகள் அவசர உதவிக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேடி சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். கிராமப்புறங்களில் பஸ் வசதி இல்லாததால், நோயாளிகள் மாட்டு வண்டிகளில் மருத்துவமனைக்கு செல்லும் அவலமும் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு நர்சுகள் அவர்களுக்கென அரசால் கட்டித் தரப்பட்ட துணை சுகாதார நிலையங்களில் தங்காததால், இக்கட்டடங்களின் மேற்கூரை, கதவு, ஜன்னல்கள் மற்றும் பொருட்களை சமூக விரோதிகள் எடுத்துச் சென்று விட்டனர். பல துணை சுகாதார நிலையங்கள் சேதமான நிலையில் பாழடைந்து உள்ளது.சில கிராமங்களில் கட்டடத்தின் அருகில் உள்ளவர்கள் தங்களது கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். பல கிராமங்களில் இக்கட்டடங்களில் சமூக விரோதச் செயல்களும் நடந்து வருகின்றன.இதனால் அரசுப் பணம் பல கோடி ரூபாய் வீணாகி உள்ளதோடு, கர்ப்பிணிகளும் உடனடி சிகிச்சை பெற இயலாத நிலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே, துணை சுகாதார நிலைய மையங்களை சீரமைத்து, அங்கு அரசு விதிப்படி நர்சுகள் தங்கி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுகுறித்து பெயர் கூற விரும்பாத கிராம நர்ஸ் ஒருவர் கூறும் போது, ''பல கிராமங்களில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது. எங்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் துணை சுகாதார நிலையங்களில் தங்கி சிகிச்சை அளிக்க முடியவில்லை,'' என்றார்.
கர்ப்பிணி ஒருவர் கூறும் போது, ''நர்சுகள் துணை சுகாதார நிலையங்களில் தங்காததால் தடுப்பூசி போட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று காத்திருக்க வேண்டியுள்ளது. கிராமங்களில் இருந்து வர பஸ் வசதியும் இல்லை,'' என குமுறினார்.இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் கேட்டதற்கு, ''மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையங்களும் பாழடைந்து உள்ளதால் அங்கு நர்சுகள் தங்குவதில்லை. கட்டடங்களை சீரமைத்து கொடுத்தால்
கிராமங்களில் உள்ள துணை சுகாதார நிலையங்களில் நர்சுகள் தங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றனர்.