Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/உள்வாடகைக்கு விடப்படும் வணிக வளாகம் :ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு

உள்வாடகைக்கு விடப்படும் வணிக வளாகம் :ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு

உள்வாடகைக்கு விடப்படும் வணிக வளாகம் :ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு

உள்வாடகைக்கு விடப்படும் வணிக வளாகம் :ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு

ADDED : ஜூலை 13, 2011 10:19 PM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்காக கட்டி கொடுக்கப்பட்ட வணிக வளாகத்தை சரிவர பயன்படுத்தாமல் உள்வாடகைக்கு விட்டுள்ளதால், ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு, குடிமங்கலம் ஆகிய ஐந்து ஒன்றியங்களுக்கும், நகராட்சிகளிலும் கடந்த 2004-05ம் ஆண்டு சிறப்பாக செயல்பட்ட மகளிர் சுயஉதவி குழுக்கள் பொருட்களை சிரமமின்றி விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நகரின் மையப்பகுதியில் வணிக வளாகம் கட்டப்பட்டது. மொத்தம் 15 கடைகள் கட்டப்பட்டு, மூன்று சுயஉதவிக்குழுக்கள் இணைந்து ஒரு கடையில் செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டது. இக்குழுக்களுக்கு, முன்பணம் இன்றி மாத வாடகையாக 300 ரூபாய் மட்டும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. வணிக வளாகம் அமைத்து ஒரு மாதம் வரை குழுக்கள் அனைத்தும் ஒற்றுமையுடன் செயல்பட்டன. அதன்பின், பெரும்பாலான குழுக்கள் கலைக்கப்பட்டுவிட்டன. இதனால், இக்குழுக்கள் அரசியல் கட்சியினருக்கும், தனிநபர்களுக்கும் கடைகளை உள்வாடகைக்கு விட்டு வருகின்றன. கடந்த ஐந்தாண்டுகளாக, கடைகளை உள்வாடகைக்கு எடுத்த நபர்கள் மட்டுமே இப்பகுதியில் கடை நடத்தி வருகின்றனர். மொத்தமுள்ள கடைகளில், இரண்டு குழுக்கள் மட்டுமே கடைகளை நடத்துகின்றன. இது குறித்து ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அதிகாரிகள் மூலம் எச்சரிக்கை விடுத்தும், தனிநபர்களை கடைகளை காலி செய்ய முன்வரவில்லை. இதனால், ஒன்றியத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானம் ஐந்தாண்டுகளாக கிடைக்காமல் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது, ஆட்சி மாற்றத்தால் வணிக வளாக கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு அரசு சார்பில் 'டெண்டர்' விட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் நலன்கருதி வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டது. தற்போது, குழுக்களின்றி, தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளனர். குழுக்களுக்கு 300 ரூபாய் வாடகைக்கு விட்ட கடைகளை தனிநபர்களுக்கு ஒன்பதாயிரம் ரூபாய் வரையிலும் உள்வாடகைக்கு விட்டுள்ளனர். இதில், அரசியல் கட்சிகளின் 'பலத்துடன்' சிலர் கடை நடத்துகின்றனர். பலமுறை எச்சரிக்கை விடுத்தும் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. மாவட்ட நிர்வாகம்தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும். கடைகளை மீண்டும் ஏலம் விட்டால், ஒன்றியங்களுக்கு வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது, என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us