/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்
கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்
கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்
கலெக்டர் நடவடிக்கை எடுக்காததால் செயலில் இறங்கிய வாலிபர்
ADDED : ஆக 29, 2011 11:04 PM
காஞ்சிபுரம் : கலெக்டரிடம் மனு கொடுத்து, நாட்கள் பல கடந்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால், தன் சொந்த முயற்சியில் கோரிக்கையை நிறைவேற்றி, அனைவருடைய பாராட்டையும் பெற்றுள்ளார், காஞ்சிபுரம் மனித விழிப்புணர்வு அமைப்பின் தலைவர்.காஞ்சிபுரம் அடுத்த விப்பேடு கிராமத்தை சேர்ந்தவர் கேசவன், 40.
இவர், தமிழ்நாடு ஜரிகை தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அங்கு நடந்த முறைகேடுகள் குறித்து, உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியதால், பணியிலிருந்து நீக்கப்பட்டார். இதுகுறித்து, அவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.வேலையிலிருந்து நீக்கப்பட்ட அவர், கலெக்டர் அலுவலகம் அருகே, பிளாட்பாரத்தில், சைக்கிள் பழுது பார்க்கும் கடையை துவக்கினார். அதில் கிடைக்கும் வருமானத்தில், வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பொது சேவை செய்வதில் ஆர்வமுடைய இவர், மக்களுக்கு சேவை செய்வதற்காக, 'மனித விழிப்புணர்வு அமைப்பு' என்ற பெயரில், ஒரு அமைப்பை துவக்கினார். மக்கள் பிரச்னைகளை தீர்க்கக் கோரி, அமைப்பின் சார்பில் அவ்வபோது, கலெக்டர் அலுவலகம் சென்று, மனு கொடுத்தார்.அப்போது, கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக, திங்கட்கிழமைதோறும் நூற்றுக்கணக்கானோர், கலெக்டர் அலுவலகம் வருவதை கண்டார். அவர்கள் மனு கொடுக்கும் இடத்தில், குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லாததால், அங்கு வரும் மக்கள், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடைகளில், காசு கொடுத்து குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.எனவே, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வரும் மக்களின் வசதிக்காக, திங்கட்கிழமை மட்டுமாவது, தரைதளத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், எனக் கோரி கேசவன் இரண்டு வாரங்களுக்கு முன், கலெக்டரிடம் மனு கொடுத்தார். அம்மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கம்போல், மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டனர்.இதை கண்ட கேசவன், மாவட்ட நிர்வாகத்தை எதிர்பார்த்து, இனி பலனில்லை என்பதை உணர்ந்த அவர், தனது சொந்த செலவில், குடிநீர் கேன்களை வாங்கி, கலெக்டர் அலுவலகம் வரண்டாவில், நேற்று, மக்கள் குடிப்பதற்காக வைத்தார். தண்ணீர் தீரத் துவங்கியதும், கேசவன் தனது சைக்கிளில் சென்று, குடிநீர் வாங்கி வந்தார். அவரது சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.'மனமிருந்தால் மார்க்கம் உண்டு' என்ற பழமொழிக்கேற்ப, அவர் தனக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்திலேயே, மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து, அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். எனவே, அவரது சேவைக்கு மதிப்பளிக்கும் வகையிலாவது, மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும்.