/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/"வந்தால் எனக்கு; வராவிட்டால் வாரிசுக்கு'"வந்தால் எனக்கு; வராவிட்டால் வாரிசுக்கு'
"வந்தால் எனக்கு; வராவிட்டால் வாரிசுக்கு'
"வந்தால் எனக்கு; வராவிட்டால் வாரிசுக்கு'
"வந்தால் எனக்கு; வராவிட்டால் வாரிசுக்கு'
ADDED : செப் 20, 2011 12:54 AM
கோவை : சட்டசபை தேர்தலின்போது, வீடியோ படம் பிடித்த வகையில், இன்னும் பணம் கிடைக்காத வீடியோகிராபர்கள், 'நாங்கள் இறந்து போனால், எங்கள் வாரிசுக்கு பணத்தை கொடுத்து விடுங்கள்' என்று கூறி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கடந்த சட்டசபை தேர்தலில், அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் வீடியோ படம் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்பட்ட வீடியோகிராபர்களுக்கு பெரும் போராட்டத்துக்கு பிறகு, சிறிது சிறிதாக பணம் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில், வால்பாறை தொகுதியில் வீடியோ எடுத்த நால்வருக்கு, தலா 77 ஆயிரத்து 700 ரூபாய் வீதம் இன்னும் பணம் வழங்கப்படவில்லை. அவர்கள் நால்வரும், நேற்று கோவை கலெக்டர் கருணாகரனிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'வீடியோ எடுத்ததற்கு பணம் கேட்டு பல முறை மனு கொடுத்து விட்டோம். இது தொடர்பாக வந்து போகும்போது, உயிர் இழப்பு ஏற்பட்டால், தேர்தல் பணிக்கான ஊதியத்தை வாரிசு அடிப்படையில், எங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து விடுங்கள்' என்று தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் முடிந்த நிலையிலும், இன்னும் பணம் வழங்கப்படாததை உணர்த்தும் வகையிலும், அதிகாரிகளின் செயலற்ற தன்மையை கிண்டல் செய்யும் வகையிலும் அமைந்திருந்த இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், தக்க நடவடிக்கை எடுக்கும்படி, தேர்தல் பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டார்.


