/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு : "தடா' கைதிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்புஇந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு : "தடா' கைதிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு
இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு : "தடா' கைதிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு
இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு : "தடா' கைதிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு
இந்து முன்னணி தலைவர் கொலை வழக்கு : "தடா' கைதிகள் 6 பேருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட் தீர்ப்பு
UPDATED : செப் 09, 2011 01:29 AM
ADDED : செப் 09, 2011 01:27 AM
திருநெல்வேலி : மதுரையில் மாநில இந்து முன்னணி தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தடா கைதிகள் 6 பேருக்கு ஆயுள்தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மதுரை வடக்கு ஆவணி மூலவீதியை சேர்ந்தவர் ராஜகோபாலன்(42). இந்து முன்னணியின் மாநில தலைவராக பொறுப்பு வகித்தார். கடந்த 94ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி காலை 6.15 மணிக்கு வீட்டின் முன் இருந்து பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை அரிவாள்,கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வெட்டினர். இதில் ராஜகோபாலன் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து திலகர் திடல் போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை துவக்கினர். அடுத்த நாள் இந்த வழக்கு சிபிசிஐடி.,விசாரணைக்கு மாற்றப்பட்டது. அப்போதைய சிபிசிஐடி.,டிஐஜி.,லத்திகா சரண், எஸ்பி.,துக்கையாண்டி உத்தரவின் பேரில் அக்டோபர் மாதம் 20ம் தேதி தடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 21ம் தேதி மதுரை கீழவெளிவீதியை சேர்ந்த சீனிநயினா முகமது என்பவரை சிபிசிஐடி.,போலீசார் கைது செய்தனர். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அவர் அளித்த தகவலின் பேரில் கத்தி,ரத்தக்கறை படிந்த சட்டை,லுங்கி போன்ற பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவாயினர். இதையடுத்து 96ம் ஆண்டு இந்த தடா வழக்கு சிபிஐ.,க்கு மாற்றப்பட்டது. கோவை தெற்கு உக்கடத்தை சேர்ந்த இப்ராகிம் மகன் சாகுல் ஹமீது(38), மதுரை நெல்பேட்டை நாகூர் தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அலி மகன் ராஜாஉசேன், கோவை கவுண்டம்பாளையம் பிஅன்ட் டி காலனியை சேர்ந்த ஷேக் மைதீன் மகன் முகமது சுபைர், கோவை நவாப்புதீன் தோட்டத்தை சேர்ந்த சலாவூதீன் மகன் ஜாகிர் உசேன், மதுரை தென்றல் நகரை சேர்ந்த முகைதீன் மகன் அப்துல் அஜீஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இஸ்லாமிய மதத்திற்கு எதிராக இந்து முன்னணி ராஜகோபாலன் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்ததால் 5 பேரும் சேர்ந்து கொலை செய்ததாக விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து இந்த தடா வழக்கு சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் நடந்தது. கடந்த 2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல் நெல்லை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்(தடா) கோர்ட்டில் விசாரணை துவங்கியது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணையில்,அரசு தரப்பில் 32 சாட்சிகளும், 74 சான்று ஆவணங்களும், 13 சான்று பொருட்களும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த மாதம் 25ம் தேதி விசாரணை முடிவடைந்தது. செப்டம்பர் 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி கூறினார். இதையடுத்து நெல்லை தடா கோர்ட்டில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தடா கோர்ட் நீதிபதி விஜயராகவன் முன்னிலையில் நேற்று மாலை 6.40 மணிக்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி விஜயராகவன், குற்றம்சாட்டப்பட்ட சாகுல்ஹமீது, ராஜா உசேன், முகமது சுபைர், ஜாகிர் உசேன், அப்துல் அஜீஸ் ஆகிய 5 பேருக்கும் தடா சட்டம் 3(2) உடன் இணைந்த 3(1), உடன் இணைந்த 149 பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். 6வது எதிரியான சீனி நயினா முகமதுவிற்கு தடா சட்டம் 3(2), 3(1) உடன் இணைந்த 109 உடன் இணைந்த பிரிவின் கீழ் ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாயும், 3(4), தடா சட்டத்தின் கீழ் ஆயுள்தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்கவேண்டும் என நீதிபதி கூறினார். இந்த வழக்கில் சிபிஐ.,சிறப்பு அரசு வக்கீல் சுரேஷ் சுப்பிரமணியன், வக்கீல் நடராஜ சங்கர் ஆஜராயினர். பலத்த பாதுகாப்பு: >தடா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் சென்னை, திருச்சி,கோவை, பாளை.,போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரையும் நேற்று காலை சுமார் 10 மணிக்கு பலத்த பாதுகாப்போடு கோர்ட்டிற்கு போலீசார் அழைத்து வந்தனர். உதவி கமிஷனர்கள் ராமச்சந்திரன், ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பிரான்சிஸ், முருகன், சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் குவிக்கப்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடைசி தடா வழக்கு: >கடந்த 94ம் ஆண்டு இந்து முன்னணி மாநில தலைவர் ராஜகோபாலன் கொலை தடா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் விசாரணை நடைபெற்ற காலத்தில் தடா சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றது. இருப்பினும் இந்த வழக்கு மட்டும் தடா சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு நெல்லை தடா கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் அனைத்து தடா வழக்குகளும் முடிவுக்கு வந்துள்ளன. 'மீண்டும்' ஆயுள்தண்டனை * தடா வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்களில் சாகுல்ஹமீது, முகமதுசுபைர், ஜாகிர் உசேன், அப்துல் அஜீஸ் ஆகியோர் ஏற்கெனவே கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள். மேலும் இவர்கள் கோவை வீரகணேஷ் கொலை வழக்கு, திண்டுக்கல் இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கொலை வழக்குகளிலும் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.