ADDED : அக் 06, 2011 09:37 PM
கோவை : தற்போது மிளகாய் சாகுபடி செய்தால், அறுவடை காலத்தில் வற்றலுக்கு
நல்ல விலை இருக்க வாய்ப்புள்ளது.
விவசாயிகள் மிளகாய் சாகுபடியை உடனே
துவங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உலகில் மிளகாய் உற்பத்தி மற்றும்
பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சீனா,
பாகிஸ்தான், பெரு, பங்களாதேஷ் போன்ற நாடுகள் உள்ளன. உணவில் சுவையை
அதிகரிக்க செய்வது மட்டுமில்லாமல் மருத்துவம், எண்ணெய், சாயமேற்றுதல்
போன்றவற்றிற்கும் மிளகாயின் தேவை உலகளவில் அதிகரித்துள்ளது. இந்தியாவில்
விளையும் மிளகாய்க்கு சிறப்பு குணங்கள் பல உள்ளன. காடி, சன்னம் போன்ற
ரகங்கள் இயற்கை வர்ணங்களுக்காவும், பறவைகண் மிளகாய் காரத்துக்காவும்,
கர்நாடகா மிளகாய் எண்ணெய்க்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனால்
வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை,
விருதுநகர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் சம்பா வகையும், சங்கரன்கோவிலில்
குண்டு வகையும் அதிகளவில் வற்றல் மிளகாய் உற்பத்தி செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் மொத்த மிளகாய் உற்பத்தியில் 58 சதவீதம் மானாவாரி நிலங்களில்
உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டில் ஜூலை முதல் செப்.,வரை விருதுநகர் சந்தையில்
வற்றல் சம்பா மிளகாய் கிலோவிற்கு 31 முதல் 49 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தற்போது கிலோவுக்கு 82 முதல் 89 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஆந்திராவில்
காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட மிளகாயின் பரப்பளவு குறைவாக இருந்ததே விலை
உயர்வுக்கு காரணம். வேளாண் பல்கலையில் நடந்த ஆய்வின்படி, மிளகாய்
வற்றலுக்கு விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வரும் 2012ம் ஆண்டு
பங்குனி, சித்திரை மாதங்களில் கிலோவிற்கு 60 முதல் 70 ரூபாய் வரை விலை
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் மிளகாய் உற்பத்தி
பரப்பு குறைந்ததால், இந்த நேரத்தில் தமிழகத்தில் மிளகாய் பயிர் செய்தால்
வற்றலுக்கு நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் ஐப்பசி மாதத்தில்
மிளகாய் விதை ப்பதால் நல்ல பலனை அடையலாம் என, வே ளாண் பல்கலை
விவசாயிகளுக்கு பரிந்துரை செய்துள்ளது.


