Dinamalar-Logo
Dinamalar Logo


/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

டீ கடை பெஞ்சு

PUBLISHED ON : ஆக 04, 2011 12:00 AM


Google News
Latest Tamil News
கைதாவதில் இருந்து தப்பிக்க மாஜி மந்திரி அதிரடி நடவடிக்கை!

''கட்சிக்காரா எல்லார்ட்டயும் கெட்ட பேர் வாங்கிட்டாராம் ஓய்...!'' என, முதல் ஆளாக களமிறங்கினார் குப்பண்ணா.

''எந்தக் கட்சி விவகாரம் பா...'' என, விவரம் கேட்டார் அன்வர்பாய்.

''அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, வடசென்னையில உள்ள பேச்சாளர் எம்.எல்.ஏ.,வைச் சொன்னேன்... மேலிட செல்வாக்கை வச்சு எம்.எல்.ஏ., சீட் வாங்கி ஜெயிச்சுட்டார்... இருந்தாலும், கட்சிக்காரங்ககிட்ட ஒட்டாம இருக்காராம் ஓய்... அது கூட பரவாயில்லை... கட்சிக்காரங்க செய்யற தப்பு, தண்டாக்களை எல்லாம் கார்டனுக்கு கொண்டு போய் சொல்லி நடவடிக்கைக்கு ஆளாக்கிடறாராம்...'' என்றார் குப்பண்ணா.

''கட்சிக்காரங்க எல்லாம் கட்டம் கட்டிடுவாங்களே...'' என்றார் அன்வர்பாய்.

''அப்படித்தான் ஆயிடுத்து ஓய்... மாவட்டம், பகுதி, வட்டம்னு எல்லாரும் இவரைக் கண்டாலே ஓடி ஒளியறாங்களாம்... அதனால, லோக்கல் ரவுடிகள் ரெண்டு பேரை கூட வச்சுண்டு தொகுதியை சுத்தி வர்றார்... கூட இருக்கறவங்களால, இவரது பேர், இன்னும் ரிப்பேர் ஆயிண்டிருக்கு...'' என்றார் குப்பண்ணா.

''வேலைகள் வேகமா நடக்குதுங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.

''நல்ல விஷயம் தானே வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

''முந்தைய ஆட்சியில, விழுப்புரம் மாவட்டத்துல அப்ப இருந்த அமைச்சர் ஆதரவோட பாலங்கள், சாலைகள் கான்ட்ராக்ட் எடுத்து, வேலை செய்யாமலேயே செய்ததா கணக்கு காட்டி பணத்தை வாங்கிட்டாங்க... புது ஆட்சி அமைந்ததும், இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது... ஏற்கனவே மாஜி அமைச்சர்கள் கைது சம்பவங்கள் நடந்துட்டு இருக்கறதால, இந்த விவகாரத்துல நம்மையும் கைது செய்திடுவாங்களோன்னு, மாவட்ட முன்னாள் அமைச்சர் நினைச்சிருக்கார்...

''அதனால, பழைய கான்ட்ராக்ட் மூலமா செய்யாம விட்ட வேலைகளை முழுசா செய்யச் சொல்லிருக்காருங்க... இப்ப வேலைகள் எல்லாம் வேகமா நடந்துட்டு இருக்குங்க...'' என விளக்கினார் அந்தோணிசாமி.

''தென் மாவட்டங்களுக்கு நாயுடு சமுதாயத்துல, அமைச்சர் பிரதிநிதித்துவம் இல்லைன்னு அந்த சமுதாயத் தலைவர்கள் வருத்தப்படுறாங்க பா...'' என, கடைசி தகவலுக்குள் நுழைந்தார் அன்வர்பாய்.

''விவரமா சொல்லும் ஓய்...'' என்றார் குப்பண்ணா.

''விருதுநகர், திண்டுக்கல், தூத்துக்குடி மாவட்டங்கள்ல, நாயுடு சமுதாய மக்கள் அதிகளவுல இருக்காங்க பா... சட்டசபை தேர்தல்ல, இவங்களோட கணிசமான ஓட்டு ஆளுங்கட்சிக்கு விழுந்துருக்கு... இந்த சமுதாயத்தைச் சேர்ந்த ரெண்டு பேருக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்காங்க... ஆனா, ரெண்டு பேருமே தென்சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவங்க...

''தென் மாவட்டங்களைச் சேர்ந்த நாயுடு சமுதாயத்துல இருந்து ஒருத்தருக்கு கூட அமைச்சரவையில பிரதிநிதித்துவம் தரலையேன்னு, அந்த சமுதாயத் தலைவர்கள் வருத்தப்படறாங்க... இது சம்பந்தமா, முதல்வருக்கு கோரிக்கையும் வைச்சிருக்காங்க பா...'' எனக் கூறிவிட்டு, அன்வர்பாய் நடையைக் கட்ட, மற்ற பெரியவர்களும் புறப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us