இரட்டை மின் இணைப்பு பெற்று கட்டண மோசடி: மின்துறைக்கு ரூ. 1,000 கோடி இழப்பு
இரட்டை மின் இணைப்பு பெற்று கட்டண மோசடி: மின்துறைக்கு ரூ. 1,000 கோடி இழப்பு
இரட்டை மின் இணைப்பு பெற்று கட்டண மோசடி: மின்துறைக்கு ரூ. 1,000 கோடி இழப்பு

தமிழகத்தில், கடந்த ஆட்சி காலங்களில், மின்துறை மிக மோசமான இழப்புகளையும், நஷ்டங்களையும் சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டு வரை, தமிழக மின்துறைக்கு, 45 ஆயிரம் கோடி ரூபாய் கடனும், 38 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பும், நஷ்டமும் இந்த ஆண்டிலும் அதிகரிக்கும் என, மின்துறையின் நடப்பு நிதியாண்டு திட்ட அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.அதேநேரம் முடிந்த அளவுக்கு, மின்துறையின் நஷ்டத்தை சரி கட்ட, மின்வாரியம், எரிசக்தி மேம்பாட்டு முகமை, தமிழ்நாடு பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் ஆகியவை இணைந்து, கூட்டு முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.இந்நிலையில், நஷ்டங்களை குறைக்க, மீட்டர்களை மாற்றுதல், ஓடாத மீட்டர்களை கண்டறிதல், திருத்தப்பட்ட மீட்டர்களால் மோசடி செய்வோரை தண்டித்தல், மின்திருட்டை தடுத்தல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பணிகளின் போது, நூதன முறையில், மின்கட்டண மோசடி நடப்பதாக, மின்வாரியத்திற்கு அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து, மின்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் வீடுகள், விவசாயம், வணிகம், தொழிற்சாலை ஆகியவற்றுக்கு, தனித்தனியான மின் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. விவசாயத்திற்கு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் தரப்படுகிறது. வீடுகளுக்கு மானிய விலைக் கட்டணம் வசூலிக்கிறோம். தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கு, தனியான மின்கட்டணம் பெறப்படுகிறது. வீடுகளை விட தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்களுக்கு கட்டணம், காப்புத்தொகை அதிகம். ஒரு இணைப்பு உள்ள வீட்டிற்கோ, கட்டடத்திற்கோ, வேறு விதமான இணைப்பு தர முடியாது. அடுக்குமாடியாக இருப்பின், வணிக ரீதியான மின் இணைப்பு தரப்படும். இதில், வீடுகளுக்கு ஆவணப்படி உரிமையாளர்கள் தனித்தனியாக இருந்து, உரிய சட்ட அனுமதி பெற்றிருந்தால் அவர்களுக்கு வீடுகளுக்கான இணைப்பு தரப்படும். இந்நிலையில், பெரும்பாலான தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில், இரண்டு விதமான இணைப்பு பெற்று, மின்கட்டண மோசடி செய்வதை கண்டுபிடித்துள்ளோம்.
உயர் மின்னழுத்த இணைப்பு, குறைந்த மின்னழுத்த இணைப்பு மற்றும் குறைந்த மின்னழுத்த சி.டி., இணைப்பு (வணிகம்) ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பல தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றில், உயர்மின்னழுத்த இணைப்பை பெற்று விடுகின்றனர். பின், குறைவான கட்டணம் கட்டுவதற்காக, குறைந்த மின்னழுத்த இணைப்பையும் மோசடியாக பெற்று விடுகின்றனர். இதனால், பெயரளவில், உயர்மின்னழுத்த இணைப்பை பயன்படுத்தி, பெரும்பாலும், குறைந்த மின்னழுத்த இணைப்பை பயன்படுத்துகின்றனர்.இதனால், மின்வாரியத்திற்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. இந்த வகையில் மட்டும், தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, ஈரோடு, நாமக்கல் போன்ற நகரங்களில், ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.சட்டப்படி, ஒரு விதமான மின் இணைப்பு கொடுத்தால், அதே இணைப்புடன் சேர்த்து, மற்றொரு இணைப்பு தர முடியாது. ஆனால், சட்டவிரோதமாக, இரட்டை வித இணைப்புகளை பெற்று மோசடி செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
முறைகேடுகளுக்கு யார் காரணம்?இரட்டை மின்இணைப்பு வழங்குவதில், மின்துறை கள அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உண்டு. மின்இணைப்பு கொடுக்கும் முன், ஆவணங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களில், சட்டப்படி சோதனை செய்யாமல், அலட்சியமாக செயல்படுகின்றனர். இதனால், முறைகேடான, இணைப்புக்கு ஒப்புதல் கொடுத்து, வாரியத்தின் இழப்புக்கு காரணமாவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ''மின் இணைப்பு தரும் முன், மின்துறையின் வணிக ஆய்வாளர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று, நேரடி ஆய்வு நடத்தி, அறிக்கை தர வேண்டும். இதில், மின்துறை வணிக ஆய்வாளர்கள் பலர், சரியான ஆய்வறிக்கை தராததே, முறைகேடான இரட்டை இணைப்புகளுக்குக் காரணம்,'' என்றார்.
நமது சிறப்பு நிருபர்