Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/"உறவுகள் கைவிடலாம்; பகவான் கைவிட மாட்டார்'

"உறவுகள் கைவிடலாம்; பகவான் கைவிட மாட்டார்'

"உறவுகள் கைவிடலாம்; பகவான் கைவிட மாட்டார்'

"உறவுகள் கைவிடலாம்; பகவான் கைவிட மாட்டார்'

ADDED : செப் 21, 2011 12:12 AM


Google News
திருப்பூர் : ''உறவுகள், நண்பர்கள் கூட, பல்வேறு காரணங்களுக்காக நம்மை கைவிட்டு விடலாம்; ஆனால், பகவான் நம் துன்பங்களை நீக்கி, என்றும் காத்தருள்வார்,'' என சொற்பொழிவாளர் வேளுவக்குடி கிருஷ்ணன்

பேசினார்.'ஸ்ரீமத் பாகவதம்' ஆன்மிக உபன்யாச நிகழ்ச்சி, திருப்பூர் காயத்ரி கல்யாண மண்டபத்தில் நடந்து வருகிறது. சொற்பொழிவாளர் வேளுவக்குடி கிருஷ்ணன் பேசியதாவது:மனிதர்கள் மாறி மாறி பிறப்பெடுப்பதுபோல், பகவான் நாராயணனும் எத்தனையோ அவதாரங்கள் எடுத்துள்ளார். ஆனால், பஞ்ச பூதங்கள் அடங்கியதாக நமது உடல் படைக்கப்படுகிறது; பகவானின் திருமேனி ரஜோ, தமோகுணம் கலக்காமல், சத்வீகத்தால் ஆனவர். சாதுக்களை காத்தல், துஷ்டர்களை அழித்தல், தர்மத்தை காத்தல் ஆகிய மூன்று முக்கிய காரணங்கள் பகவானின் அவதார நோக்கங்களாக உள்ளன.பகவானுக்கு ஐந்து நிலைகள் உண்டு. முதலாவது 'வைகுண்ட நிலை'; பரவாசுவேதம் வைகுண்ட நாதம் என்கிறோம் நாம். இரண்டாவது நிலை 'வியூகம்'; பாற்கடலில் சயனித்திருப்பது. மூன்றாவது நிலை 'விபாங்கம்'; பாற்கடலில் இருந்து புறப்பட்டு, பூலோகத்தில் பிறவி எடுப்பது. நான்காவது 'அந்தர்யாமி' என்ற நிலையில் ஒவ்வொருவர் இதயத்திலும் எழுந்தருளி, நம்மை நல்வழிப்படுத்தி காத்தருள்கிறார்.இந்நான்கு நிலைகளை விட, பகவானின் ஐந்தாவது நிலையான விக்ரக நிலை, சிறப்பானது என்கின்றனர் ஆன்றோர். மற்ற நிலைகளில் எளிதாக வணங்க முடியாது என்பதற்காகவே, பகவான் விக்ரகமாக அனைத்து இடங்களிலும் எழுந்தருளியுள்ளார். இரண்யாட்சன் பூமாதேவியை கடலுக்குள் சிறை வைத்தான்.பிரம்மாவின் மூக்கிலிருந்து நாராயணன், வராகமாக (பன்றி) அவதரித்து, பூமாதேவியை தூக்கி வந்தார். தன்னை காத்தருளிய வராகரிடம் பூமாதேவி, சம்சார கடலில் விழுந்து அல்லல்படும் மனிதர்கள் உய்ய வழி கேட்கிறாள். வாயால் என்னை பாடு; மனதால் என்னை நினை; கரங்களால் என்னை அர்ச்சித்திரு என்று உபதேசித்தார் பகவான்.சுயம்புவ மனு - சதரூபையின் மகன்கள் ப்ரியபிரதன், உத்தானபாதன். உத்தானபாதன் சுருதி, சுனீதி என்று இரு பெண்களை மணந்தான். சுருதிக்கு உத்தமன் என்ற மகன்; சுனீதிக்கு துருபன் என்ற மகனும் பிறந்தனர். உத்தமன் தந்தை மடியில் இருந்தபோது, துருபனும் மடியில் அமர சென்றபோது, சிற்றன்னை சுருதி தடுத்தாள். சிறுவனான துருபன், காட்டுக்குச் சென்று கடும் தவம் புரிந்தான். ஒவ்வொரு மாதமும் அவனது தவம் கடுமையாகிக் கொண்டே போக, நாராயணன் அவன் முன் தோன்றினார். பகவானை பார்த்த துருபன், இறைவனை போற்றி பாடும் அளவு கூட, நான் படிக்கவில்லையே என்று வருந்தினான். பகவான் கையில் வைத்திருந்த பஞ்சஜன்யத்தால் கன்னங்களை தடவியதும், துருபனுக்கு ஞானம் பிறந்தது; இறைவனை போற்றி பாடினான். சிறுவன், மேலோன், கீழோன் என்ற எவ்வித பாகுபாடும் இன்றி, தேடி வரும் அனைவருக்கும் அருள்பவன் பகவான் நாராயணன். நாமோ, கைம்பெண்களை சுப நிகழ்ச்சிகளில் ஒதுக்குவது; ஒற்றை பிராமணரை கண்டால் சரியில்லை என்று வீட்டுக்குள் சென்று விடுவது போன்ற மூட பழக்கங்களை கொண்டிருக்கிறோம். கணவன் முதலில் இறப்பதே சிறந்தது என்கிறது, தர்மம். வீட்டு வேலைகள் அனைத்தும் செய்யத் தெரிந்தவர்கள் பெண்கள்;

ஆண்களுக்கு வீட்டு வேலைகள் தெரியாது. வயது முதிரும்போது, கணவனை பிரிந்து மனைவி வாழ்வது சுலபம்; மனைவியை பிரிந்து கணவன் வாழ்வது மிக கடினம். எவ்வாறேனும், எவராயினும் இறைவன் ஒதுக்குவது இல்லை. அனைவரும் தன்னைத்தேடி வரமாட்டார்களா என்று, அவன் நமக்காக காத்திருக்கிறான். உறவுகள், நண்பர்கள் கூட, பல்வேறு காரணங்களுக்காக நம்மை கைவிட்டு விடலாம்; ஆனால், பகவான் நம் துன்பங்களை நீக்கி, என்றும் காத்தருள்வார்.இவ்வாறு, வேளுவக்குடி கிருஷ்ணன் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us