Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/முத்தமிழ்ப் பேரவைக்கு ஏன் இந்த சலுகை? : ஆறு கிரவுண்ட் நிலம் ஆண்டுக்கு ரூ.1,000 யில் குத்தகை

முத்தமிழ்ப் பேரவைக்கு ஏன் இந்த சலுகை? : ஆறு கிரவுண்ட் நிலம் ஆண்டுக்கு ரூ.1,000 யில் குத்தகை

முத்தமிழ்ப் பேரவைக்கு ஏன் இந்த சலுகை? : ஆறு கிரவுண்ட் நிலம் ஆண்டுக்கு ரூ.1,000 யில் குத்தகை

முத்தமிழ்ப் பேரவைக்கு ஏன் இந்த சலுகை? : ஆறு கிரவுண்ட் நிலம் ஆண்டுக்கு ரூ.1,000 யில் குத்தகை

ADDED : ஜூலை 29, 2011 11:42 PM


Google News

சென்னை, அடையாறு திரு.வி.க.

பாலம் அருகில், பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான ஆறு கிரவுண்ட் நிலம், ஆண்டுக்கு 1,000 ரூபாய் கட்டணத்தில், 30 ஆண்டுகால குத்தகை அடிப்படையில், முத்தமிழ்ப் பேரவை என்ற அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கு ஐந்து கோடி ரூபாயில் கலையரங்கம் கட்டும் திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டதில், கடலோர ஒழுங்குமுறை விதிகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, சி.எம்.டி.ஏ.,வின் பொது தகவல் அதிகாரி, கடந்த 20ம் தேதி அளித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள்: அடையாறு சத்யா ஸ்டுடியோவுக்கு எதிரில், (ஆந்திர மகிளா சபா அருகில்) பொதுப்பணித் துறைக்கு சொந்தமாக உள்ள, ஏழு கிரவுண்ட் நிலத்தை, 'டி.என். ராஜரத்தினம் பிள்ளை கலையரங்கம்' கட்டுவதற்காக, தங்களுக்கு வழங்கக் கோரி முத்தமிழ்ப் பேரவை அறக்கட்டளை தலைவர் என். ரமணி, அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் மனு (தேதி குறிப்பிடப்படவில்லை) அளித்தார்.

நிலம் ஒதுக்கீடு: இதன் மீது, கருணாநிதியின் பரிந்துரைப்படி, சத்யா ஸ்டுடியோ அருகில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட, 2002ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிலத்துக்கு அருகில், காலியாக உள்ள 7.33 கிரவுண்ட் நிலத்தில் (சர்வே எண்: 4269/3 ), மூன்று கிரவுண்ட் நிலத்தை, ஆண்டுக்கு 1,000 ரூபாய் வீதம், 30 ஆண்டு குத்தகை அடிப்படையில், முத்தமிழ்ப் பேரவைக்கு ஒதுக்கி, 2009ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் க. இராமசுந்தரம் (அரசாணை எண்: 111) உத்தரவிட்டார்.

இங்கு கலையரங்கம் (தரைதளம், முதல்தளம்) கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரி, முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள், 2010 ம் ஆண்டு, ஜனவரி 5ம் தேதி, சி.எம்.டி.ஏ.,விடம் விண்ணப்பித்தனர். மூன்று கிரவுண்ட் நிலம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆறு கிரவுண்ட் பரப்பளவுக்கான அரங்கம் கட்ட அனுமதி கோரப்பட்டது. எனவே, அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ., மறுத்தது. இந்த விவரத்தை, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், 2010ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதியிட்ட தனது கடிதத்தில், குறிப்பிட்டுள்ளார்.

இதைச் சுட்டிக்காட்டி, முத்தமிழ்ப் பேரவை கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மூன்று கிரவுண்ட் நிலத்துடன் ,மேலும் மூன்று கிரவுண்ட் நிலமும் சேர்த்து, மொத்தம் ஆறு கிரவுண்ட் நிலமும் 1,000 ரூபாய்க்கே, 30 ஆண்டு குத்தகை அடிப்படையில் ஒதுக்கி, 2010ம் ஆண்டு, ஆகஸ்ட் 30ம் தேதி, பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் க.இராமசுந்தரம் (அரசாணை எண்: 253) உத்தரவிட்டார்.

சி.எம்.டி.ஏ., ஆட்சேபம்: இதையடுத்து, முத்தமிழ்ப் பேரவையின் திட்ட அனுமதி கோரும் விண்ணப்பம் மீதான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம், 2010ம் ஆண்டு அக்டோபர் 27ம் தேதி நடைபெற்றது. இந்தத் திட்டம், அடையாறு ஆற்றுக்கு மிக அருகில் வருவதால், கடலோர ஒழுங்குமுறை விதிகளின்படி, மத்திய சுற்றுச்சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழும், திரு.வி.க. பாலத்தை ஒட்டி இருப்பதால், நெடுஞ்சாலைத் துறையின் தடையின்மைச் சான்றிதழும் பெற வேண்டும் என்று குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், விண்ணப்பத்தை மீண்டும் திருப்பி அனுப்பினர்.

நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல்: இத்திட்டத்தால், திரு.வி.க. பாலத்தின் உத்தேச விரிவாக்கத் திட்டத்துக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது என்று கூறி, நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர், கடந்த ஆண்டு நவம்பர் 29ம் தேதி கடிதம் (எண்: 147/ஜேடியு/2010) அளித்தார்.

நெடுஞ்சாலைத் துறையின் தடையின்மைச் சான்றிதழ் மட்டுமே போதுமானது என்றும், சி.எம்.டி.ஏ., வெளியிட்டுள்ள வளர்ச்சி விதிகளின்படி, 'இடிக்கப்படும் அல்லது இடிக்கப்பட்டு புதிய கட்டடம் கட்டும்போது மட்டுமே சுற்றுச்சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழ் தேவை' என்பதால், இது தொடர்பாக சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் அறிவுறுத்தல் தங்களுக்குப் பொருந்தாது என்றும் குறிப்பிட்டு, முத்தமிழ்ப் பேரவை நிர்வாகிகள், கடந்த ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் அளித்தனர்.

சுற்றுச்சூழல் துறையின் அனுமதி பெற வேண்டியதில்லை என்பதற்கான, குறிப்பிட்டு சொல்லக் கூடிய ஆதாரங்களை அளிக்க வேண்டும் என குறிப்பிட்டு, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், கடந்த ஜனவரி 27ம் தேதி, முத்தமிழ்ப் பேரவைக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்தார்.

அதே நாளில், இச்சந்தேகங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு, கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திற்கும், சி.எம்.டி.ஏ., கடிதம் அனுப்பியது.

இதற்காக சி.எம்.டி.ஏ., முதலில் அனுப்பிய கட்டட வரைபடத்தை, அதில் உள்ள விவரங்கள் அடிப்படையில், ஆய்வு செய்த கடலோர மண்டல மேலாண்மை ஆணைய அதிகாரிகள் இத்திட்டப்பகுதியின் எல்லைகள், 130 மீட்டரில் இருப்பதாகவும், இதனை சரிபார்த்துக் கொள்ளுமாறும் சி.எம்.டி.ஏ.,வுக்கு ஜனவரி 31ம் தேதி அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.

இதையடுத்து திருத்தப்பட்ட புதிய வரைபடம், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு அளிக்கப்பட்டது.

இதன் பின்னர், 'அடையாறு ஆற்றிலிருந்து, 100 மீட்டருக்குள் இத்திட்டம் அமைந்திருப்பதால், இது கடலோர ஒழுங்குமுறை மண்டலம் - 2ன் கீழ் வருகிறது. எனவே, புதிதாகக் கட்டப்படும் திட்டமானாலும், இடித்து புதிதாகக் கட்டப்படும் கட்டடமானாலும் மத்திய சுற்றுச் சூழல் துறையின் தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும்' என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலருக்கு, தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர், கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக மேலும் சில கருத்துகள் தெரிவித்து, தமிழகக் கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலர் பிப்ரவரி இரண்டாம் தேதியும், சி.எம்.டி.ஏ.,வுக்கு கடிதம் அனுப்பினார். இந்தக் கடிதங்கள் தொடர்பாக அதேநாளில் நடைபெற்ற சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் கூட்டத்தில், ஆய்வு செய்யப்பட்டது. முத்தமிழ்ப் பேரவையின் திட்டத்தை ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்கக் கோரி, மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தைக் கேட்டுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

இதில், முத்தமிழ்ப் பேரவையின் திட்டப் பகுதி, அடையாறு ஆற்றில் இருந்து எத்தனை மீட்டர் தூரத்துக்குள் அமைந்துள்ளது என்பதில், கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்துக்கு குழப்பம் ஏற்பட்டது. இதனை உணர்ந்த சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், 'இத்திட்டப் பகுதி அடையாறு ஆற்றில் இருந்து, 40 மீட்டர் தூரத்துக்குள், அதாவது 130 அடியில் அமைந்துள்ளது' என்பதை, பிப்ரவரி 22ம் தேதியிட்ட கடிதத்தில் தெளிவுபடுத்தினர்.

-வி.கிருஷ்ணமூர்த்தி-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us