ADDED : செப் 16, 2011 11:14 PM
திருநெல்வேலி: சங்கரன்கோவிலில் மணல் சரிந்து பள்ளி மாணவன் பலியானான்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில், நிட்சேப நதி செல்கிறது. இதில், நள்ளிரவில் அனுமதியின்றி, டிராக்டரில் மணல் அள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பரமன், முருகன் ஆகியோர் டிராக்டர்களில் மணல் அள்ளச் சென்றனர். 15 பேர் மணல் அள்ள கூலிக்கு சென்றனர். உயரமான பகுதியில் இருந்து, பள்ளத்தில் மணல் சரிந்தது. இதில், குருசாமி மகன் சண்முகராஜ்,14, பாண்டியன்,19, மணலுக்குள் சிக்கிக் கொண்டனர். உடன் சென்றிருந்தவர்கள், அவர்களை அப்படியே விட்டுவிட்டு ஓடி விட்டனர். நேற்று காலை அந்த வழியாகச் சென்றவர்கள் இருவரையும் மீட்டனர். இதில், பாண்டியன் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்தார். சண்முகராஜ் இறந்துவிட்டார். கரிவலம்வந்தநல்லூர் போலீசார், மணல் அள்ளிய கும்பலை தேடிவருகின்றனர்.