ஏழு லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடு வழங்கும் திட்டம்: ரூ.925 கோடி ஒதுக்கீடு
ஏழு லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடு வழங்கும் திட்டம்: ரூ.925 கோடி ஒதுக்கீடு
ஏழு லட்சம் குடும்பங்களுக்கு இலவச ஆடு வழங்கும் திட்டம்: ரூ.925 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழகத்தில், ஏழு லட்சம் ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆடுகள் வழங்குவதற்காக, 925 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள நிலமற்ற, ஏழு லட்சம் பரம ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆடு வழங்கப்பட உள்ளது. ஒரு குடும்பத்திற்கு நான்கு ஆடுகள் வீதம், வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளதாக, அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்குவதற்காக, 925 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. ஒரு ஆடு வாங்க, 2,500 ரூபாயுடன், விதை முதலாக, 500 ரூபாய் என, மொத்தமாக ஒரு ஆட்டிற்கு, 3,000 ரூபாய் என நான்கு ஆடுகளுக்கு, 12 ஆயிரம் ரூபாயை அரசு வழங்குகிறது. ஐந்து ஆண்டுகளில் படிப்படியாக ஏழு லட்சம் குடும்பங்களுக்கும் ஆடுகள் வழங்கப்பட உள்ளது. இது தவிர, ஆடுகளுக்கான இன்சூரன்ஸ் மற்றும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஆடுகளை எடுத்துச் செல்ல, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, 35 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. ஆடுகள் பயனாளிகளிடம் சென்றடையும் போது எடுக்கப்படும் போட்டோ மற்றும் இதர செலவுகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கும் சேர்த்து, 35 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இந்த செலவினங்களுக்கு அரசு ஏற்று அரசாணையாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
செம்மறி ஆடுகள், மொத்தமாக திறந்த நிலப்பரப்பில் வளர்க்கப்படுகின்றன. ஆனால், வெள்ளாடுகள் வீடுகளில் கட்டி வளர்க்கப்படுகின்றன. இதனால், வெள்ளாடுகள் வளர்க்கப்படும் உரிமையாளர்களின் எண்ணிக்கை, தமிழகத்தில் மிகவும் குறைவு. மலைப்பகுதிகளை ஒட்டிய கிராமங்களில், வெள்ளாடுகள் வளர்க்க வனத்துறை தடை விதித்துள்ளது. கிராம பஞ்சாயத்து நிர்வாகமும் தடை விதித்துள்ளது. வெளியூர் ஆடுகள் தட்ப வெப்பநிலை வேறுபாட்டால், நோய்தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தமிழகத்தில் உள்ள வாரச்சந்தைகளில் உள்ள ஆடுகளே வாங்கப்பட உள்ளன.
காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பயனாளிகள், அவர்களுக்கு அருகில் உள்ள மாநிலத்தில் ஆடுகளை வாங்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்தாண்டு, ஒரு லட்சம் குடும்பத்திற்கும், 2வது ஆண்டு, 1.5 லட்சம், 3வது ஆண்டு, 1.5 லட்சம் குடும்பம், 4வது ஆண்டு, 1.5 லட்சம் குடும்பம், 5வது ஆண்டு, 1.5 லட்சம் குடும்பத்திற்கும் ஆடுகள் வழங்கப்பட உள்ளன. பெண்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளியாக பெண்களே தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதே நேரம், கிராமங்களில் வசிக்கும் அரவாணிகளுக்கும் தகுதியின் அடிப்படையில் ஆடுகள் வழங்கப்படும். நிலமற்ற விவசாய கூலித்தொழிலாளியாக இருக்க வேண்டும். கிராமத்தில் நிரந்தரமாக தங்கியிருப்பவராக இருக்க வேண்டும். பயனாளியின் குடும்பத்தில் உள்ள யாராவது ஒருவர், 60 முதல் 80 வயதுடையவராக இருக்க வேண்டும். பயனாளி, தற்போது ஆடு, மாடு வைத்திருக்கக் கூடாது. மத்திய மாநில அரசுகள், கூட்டுறவு அமைப்புகளில் உறுப்பினராக இருக்கக் கூடாது. பயனாளியின் கணவர், மகன், மகள், மருமகன், மருமகள் ஆகியோரும் மேற்கண்ட அமைப்புகளில் இருக்கக் கூடாது. கறவை மாடு திட்டத்தில் பயனடைந்திருக்கக்கூடாது. இந்தாண்டு, பாதி முடிந்து விட்டாதல், பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க, 135 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. 2வது ஆண்டுக்கு, 200 கோடி, 3வது ஆண்டுக்கு, 200 கோடி, 4வது ஆண்டுக்கு, 195 கோடி, 5வது ஆண்டுக்கு, 195 கோடி ரூபாய் என மொத்தமாக, ஐந்து ஆண்டுகளுக்கு, 925 கோடி ரூபாயை அரசு ஒதுக்குகிறது.
தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளில், 30 சதவீதம் எஸ்.சி., பிரிவிலும், 1 சதவீதம் எஸ்.டி., பிரிவைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் பயனாளிகள் தேர்வு இருக்கும். அது தவிர, கிராமம், ஒன்றிய அளவில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியும் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான அதிகாரம், மாவட்ட கலெக்டருக்கு வழங்கப்பட்டுள்ளது. கிராம சபை சிறப்புக் கூட்டம் நடத்தி, பயனாளிகளிடம் விண்ணப்பங்கள் வாங்க வேண்டும். அந்த கூட்டம் முடிந்த ஒரு வாரத்திற்குள்ளும் விண்ணப்பங்களை வழங்கலாம். ஒரு பயனாளிகளுக்கு வழங்கப்படும், நான்கு ஆடுகளில் ஒரு கிடா(ஆண்), 3 மருக்கை(பெண்)வழங்கப்படும். அரசு பண்ணைகளில் வளர்க்கப்படும் ஆடுகளை, முன்னுரிமை அடிப்படையில் பயனாளிகள் வாங்கிக் கொள்ளலாம். வழங்கப்படும் இடது காதில் குறியீடு இட வேண்டும். தற்போது, அரசு கால்நடை மருத்துவ பண்ணைகளில், 3,000 ஆடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை பல மடங்கு கூடுதலாக்கி வரும், 2013-14ம் ஆண்டில் அரசு பண்ணைகள் மூலம் பயனாளிகளுக்கு ஆடுகள் வழங்க முடியும் என அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இதற்காக, வரும் மூன்றாண்டுகளில் அரசு கால்நடை பண்ணைகள், 15 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள, 263 வாரச்சந்தைகள் மற்றும் ஒரு சில மாவட்டத்திற்கு அருகில் உள்ள மாநிலத்தில் உள்ள வாரச்சந்தைகளில் இலவச ஆடுகளை வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆடு வாங்கும் போது பயனாளியுடன், கால்நடைத்துறை உதவியாளர் மற்றும் கால்நடைத்துறை உதவி இயக்குனர் உடன் இருப்பார். அரசு வழங்கும் இலவச ஆடுகளை குறைந்தபட்சம், இரண்டாண்டக்கு விற்கக் கூடாது என்பது உட்பட பல்வேறு நிபந்தனைகளை கால்நடைத்துறை விதித்துள்ளது.
இது குறித்து கால்நடைத்துறை முதன்மை செயலர் ககன்தீப்சிங்பேடி கூறியதாவது: தமிழகத்தில் ஒரு விவசாயி அவரது தோட்டத்தில், நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். அதில், சில மாடுகளை வாங்கி, இலவச திட்டத்தில் தேர்வான பயனாளிகளுக்கு கொடுக்கலாம். அதில் ஒன்றும் பிரச்னையில்லை. ஆனால், தமிழகத்தில் உள்ள பசுக்களை வாங்கி, தமிழகத்தில் உள்ள பயனாளிகளுக்கு கொடுப்பதால், பால் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பில்லை. அதனால், வெளிமாநிலத்தில் உள்ள கலப்பின பசுக்களை வாங்க முடிவெடுத்தோம். தமிழகத்தில் தற்போதுள்ள பசுக்கள் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்படும் பசுக்களால், தமிழகத்தில் பால் உற்பத்தி பல மடங்கு அதிகரிக்கும். தினமும் லட்சக்கணக்கான லிட்டர் பால், வெளிமாநிலத்திற்கு விற்பனை செய்யும் நிலை விரைவில் ஏற்படக் கூடும். தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் பால் உற்பத்தி குறைவாக உள்ளதோ, அந்தந்த மாவட்டங்களில் பயனாளிகள் அதிகம் தேர்வு செய்யப்பட உள்ளனர். 60 ஆயிரம் பசுக்களை வழங்கி, ஆறாயிரம் கிராமங்களில் பால் உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் நோக்கம். பால் உற்பத்தி குறைவாக உள்ள கிராமங்களில் புதிய அரசு கூட்டுறவு பால் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். ஆடு, மாடுகள் வாங்குவதற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், பயனாளிகள் தேர்விலும் கடைபிடிக்கப்பட வேண்டும். முந்தைய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில், 92.74 லட்சம் வெள்ளாடுகளும், 79.90 லட்சம் செம்மறி ஆடுகள் இருக்கிறது. வெளியூரில் உள்ள நம்மூர் தட்ப வெப்பநிலைக்கு ஏற்றதாக இருக்காது என்பதால், உள்ளூரில் உள்ள ஆடுகளை வாங்க முடிவெடுத்துள்ளோம். இலவச ஆடுகள் வழங்கும் திட்டத்திற்கு அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு ககன்தீப்சிங்பேடி கூறினார்.
- என்.செந்தில்