தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு
தமிழகத்தில் எலி மூலம் பரவும் ஹன்டா வைரஸ் கண்டுபிடிப்பு

சென்னை: ஆந்திராவில் இருந்து சிகிச்சைக்காக வந்த மூன்று பேர், எலிகள் மூலம் பரவும் ஹண்டா வைரசால் பாதிக்கப்பபட்டுள்ளதை, தமிழக டாக்டர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்தவர் உமாதேவி,67. இவர் உள்ளிட்ட மூன்று பேர், கடும் காய்ச்சல், தலைவலி, வறட்டு இருமல் மற்றும் சுவாசக் கோளாறு காரணமாக, அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள், எந்த நோயால் பாதிக்கப்பட்டனர் என்பதை, அங்குள்ள டாக்டர்களால் கண்டறியப்படவில்லை. மூவரும் சென்னை, பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்குள்ள டாக்டர்கள் குழுவினர், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதன் பலனாக, அந்த மூவரும் ஹண்டா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த மூவரில் ஒருவரான உமாதேவி, நேற்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். அவர் ஹண்டா வைரஸ் நோயால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து, தமிழக அரசுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அந்த வைரசின் தாக்குதல் இருக்குமா என்பது குறித்து, விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
கொரியாவிலிருந்து வந்த காய்ச்சல்: ஹண்டா வைரஸ் குறித்து, குளோபல் மருத்துவமனையின் டாக்டர்களான பழனியப்பன் மற்றும் விஜய் ராகுலன் ஆகியோர் கூறியதாவது: ஹண்டா வைரஸ் என்பது, எலிகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோய். இது, விவசாயிகளைப் பெருமளவு தாக்கும். மனிதன் மூலம் மனிதனுக்கு, இந்த வைரஸ் பரவுவதில்லை. இந்த வைரஸ், கொரியா நாட்டில் இருந்து வந்தது. அங்கு, அந்த காய்ச்சலுக்கு, 'கொரியன் மெர்ஜி பீவர்' என்பர். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள், சாதா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகள் தெரியும். காய்ச்சல், வறட்டு இருமல், தலைவலி ஏற்படும். பின் சுவாசக் கோளாறு, ரத்தப் போக்கு ஏற்பட்டு, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து விடும். இறுதியில், மரணம் ஏற்படும். இந்த வைரஸ் தாக்கிய ஒருவர், தன் உடலில் உள்ள எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற வகையில், பாதிப்பை உணர்வர். இவ்வாறு, டாக்டர்கள் கூறினர்.
- ஆர்.சீனிவாசன் -