Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/பஸ்கள், ரயில்கள் ஹவுஸ்புல் அரசு போக்குவரத்துக் கழக வருவாயும் திடீர் உயர்வு

பஸ்கள், ரயில்கள் ஹவுஸ்புல் அரசு போக்குவரத்துக் கழக வருவாயும் திடீர் உயர்வு

பஸ்கள், ரயில்கள் ஹவுஸ்புல் அரசு போக்குவரத்துக் கழக வருவாயும் திடீர் உயர்வு

பஸ்கள், ரயில்கள் ஹவுஸ்புல் அரசு போக்குவரத்துக் கழக வருவாயும் திடீர் உயர்வு

ADDED : செப் 04, 2011 12:30 AM


Google News

சேலம்: பண்டிகை சிஸன் துங்கியுள்ளதால், தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் இயக்கப்படும் அனைத்து ரயில்கள், பஸ்கள் நிரம்பி வழிகின்றன.

கூட்டம் அதிகரிப்பால், தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் தினசரி வருவாய், 1.33 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கும் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய தொழில் நகரங்களுக்கும் இயக்கப்படும் அனைத்து வழக்கமான ரயில்களிலும் முன்பதிவும், பண்டிகை காலங்களில் இயக்கப்படும், சிறப்பு ரயில்களின் முன்பதிவும் முடிந்து விட்டது. இதனால், பயணிகள் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு செய்ய துவங்கி உள்ளனர். விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், பயணம் செய்யும் தேதிக்கு, 37 நாட்கள் முன்னதாக முன்பதிவு செய்யப்படும். அக்டோபர் 6ல் சரஸ்வதி பூஜை விடுமுறைக்கான முன்பதிவு, சில நாட்களுக்கு முன் துவங்கியது.



தமிழகத்தில் இயக்கப்படும் எந்த பஸ்ஸுக்கும், எங்கிருந்து வேண்டுமானாலும் முன்பதிவு செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. முன்பதிவு துவங்கிய இரண்டு நாட்களிலேயே தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், 865 பஸ்களுக்கும் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால், நேற்று முன்பதிவு செய்ய வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். ரயில், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்ட நிலையில், நேற்றுடன் ஆம்னி பஸ்களுக்கான முன்பதிவும், 75 சதவீதம் முடிவடைந்துள்ளது. எனவே, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, தென் மாவட்டங்களுக்கு அதிக அளவில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



இது குறித்து போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்தும், கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்தும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து குளிர்சாதன, அல்ட்ரா டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ் பஸ்களுக்கான முன்பதிவு முடிந்து விட்டது. அக்டோர் 5ம் தேதி துவங்கி 12 வரை மட்டுமின்றி, வெள்ளிக் கிழமைகளில் வடமாவட்டங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் தென் மாவட்டங்களில் இருந்து வடமாவட்டங்களுக்கான அனைத்து பயண சீட்டுக்களின் முன்பதிவும் முடிந்து விட்டது. தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு, இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. சாதாரண நாட்களில் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் தினசரி வருவாய், 8,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் என்று இருந்தது. பண்டிகை சீஸன் காரணமாக, தற்போது, 13 ஆயிரத்து, 330 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.

இதேபோல், தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகத்தின் தினசரி வருவாய், 80 லட்சமாக இருந்தது, ஒரு கோடியே, 33 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.



சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்கும் அளவுக்கு, அரசு போக்குவரத்துக் கிளைகளில் ஸ்பேர் பஸ்கள் இல்லை. அதனால், சிறப்பு பஸ்களை அதிகரிப்பது இயலாத காரியம். தற்போது உள்ள ஸ்பேர் பஸ்களை, சிறப்பு பஸ்களாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us