ADDED : ஆக 25, 2011 11:51 PM
திருப்பூர் : 'மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும்,' என, வங்கியாளர் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மாவட்ட வங்கியாளர்களின் மாதாந்திர ஆலோசனை கூட்டம், கலெக்டர் மதிவாணன் தலைமையில் நடந்தது. முன்னோடி வங்கி மேலாளர் ராஜகோபால் வரவேற்றார். டி.ஆர்.ஓ., கஜலட்சுமி, திட்ட அலுவலர் ரேணுகாதேவி, சென்னை ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் விஜயகுமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். மாவட்ட வங்கிகளின் ஒருங்கிணைப்பாளர்கள், வங்கி அலுவலர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்டத்தில் பொருளாதார கடன் தேவையை பூர்த்தி செய்வது குறித்தும், மத்திய - மாநில அரசுகளின் திட்டங்களை செயல்படுத்துவதில் வங்கிகளின் பங்கு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நடப்பாண்டு கடன் இலக்கை வரும் ஆறு மாதங்களுக்குள் பூர்த்தி செய்யவும், கல்விக்கடன் வழங்குவதில் எந்த தாமதமும் ஏற்படக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்காக அடுத்த மாதம் சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வங்கிகள் தங்களது சேவைப்பகுதியில் ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அனைவருக்கும் வங்கி சேவை என்ற திட்டத்தில் புதிய வங்கி கிளைகள் துவங்குதல், வராக்கடன் வசூல், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.