துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தர்ணா நடத்த கோரி மனுக்கள் :அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தர்ணா நடத்த கோரி மனுக்கள் :அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தர்ணா நடத்த கோரி மனுக்கள் :அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
ADDED : செப் 28, 2011 11:35 PM
மதுரை: பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, மதுரை, தேனியில் உண்ணாவிரதம், தர்ணா நடத்த அனுமதி கோரிய மனுக்களை விசாரித்த ஐகோர்ட் கிளை, கலெக்டரிடம் உரிய விவரம் பெற்று தெரிவிக்குமாறு, அரசு தரப்புக்கு உத்தரவிட்டது. தேனி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் சங்க கூட்டமைப்பு சட்ட ஆலோசகர் பாலு தாக்கல் செய்த மனுவில், 'பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, தேனியில் உண்ணாவிரதம் நடத்த அனுமதி கோரியபோது, எஸ்.பி., மறுத்துவிட்டார். உண்ணாவிரதம் நடத்த அனுமதிக்க வேண்டும்' என, கோரினார்.
அதேபோல, பகுஜன் சமாஜ் நிர்வாகி குருவிஜயன் தாக்கல் செய்த ரிட் மனுவில், 'துப்பாக்கிச் சூட்டை கண்டித்து மதுரையில் தல்லாகுளத்தில் தர்ணா நடத்த அனுமதியளிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்' என்றார். ஆதி தமிழர் பேரவை சார்பில், 'மதுரை கலெக்டர் அலுவலக பஸ் ஸ்டாண்ட் அருகே தர்ணா நடத்த அனுமதிக்க வேண்டும்' என, கோரப்பட்டது. இம்மனுக்கள் நீதிபதி ஆர்.சுதாகர் முன் விசாரணைக்கு வந்தன. அரசு சிறப்பு பிளீடர் கோவிந்தன், ''உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் தர்ணா, போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை,'' என்றார். குறுக்கிட்ட நீதிபதி, ''பேரணி, தர்ணா போன்றவைகளுக்கு அனுமதியளிக்க தேவையில்லை. உண்ணாவிரதம் ஒரே இடத்தில் நடப்பதால், அனுமதியளிக்கலாம். மதுரையில் எங்கு உண்ணாவிரதம் நடத்தலாம் என கலெக்டரிடம் விவரம் பெற்று, அரசு பிளீடர் இன்று தெரிவிக்க வேண்டும்,'' என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.


