ADDED : செப் 30, 2011 11:06 PM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ''ஸ்ரீவில்லிபுத்தூரை சுகாதாரமான நகராட்சியாக மாற்றுவேன் ,''என, காங்., வேட்பாளர் முத்து செல்வி தெரிவித்துள்ளார்.ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் காங்.,சார்பில் போட்டியிடுபவர் முத்து செல்வி.
இன்ஜினியரான இவர் ,காங்.,பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்தவர். தற்போது தென்காசி பார்லிமென்ட் இளைஞர் காங்.,பொது செயலாளராக இருந்து வருகிறார். இவரது கணவர் முத்தையா பாபு ஸ்ரீவி.,சட்டசபை தொகுதி இளைஞர் காங் பொது செயலாளராக உள்ளார். இவரது மாமானார் டாக்டர் மனோகரன் பிரபலமான குழந்தை டாக்டர் என்பது குறிப்பிடதக்கது. பிரசாரத்தில் ஈடுபட்ட முத்து செல்வி கூறியதாவது: தமிழகரசின் முத்திரை சின்னமாக விளங்கும், ஆண்டாள் கோயிலை உள்ளடக்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியை, பல தரப்பு மக்களும் போற்றும் வகையில், சுகாதாரமான நகராட்சியாக மாற்றுவதே முக்கிய நோக்கமாகும். அனைத்து தரப்பு மக்களுக்கும் தினமும் சுத்தமான குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப்படும். மேடான பகுதிகளுக்கும் எளிதான வகையில் குடிநீர் கிடைக்க வழி வகை செய்யப்படும். தேவைப்படும் இடங்களில் கூடுதல் ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பகுதிகளிலும் திறந்த வெளிகளை கழிப்பறையாக மாற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் மானியத்துடன் கழிப்பறை கட்டும் திட்டத்தை அமல் படுத்தப்படும். பழுதான வாறுகால்கள் செப்பனிட்டும், புதியதாக வாறுகால்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கொசுக்களின் தொந்தரவு இல்லாமல் இருக்க நகரில் பாதாள சாக்கடை திட்டம் அமல்படுத்தப்படும். ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வாகனங்கள் பார்க்கிங் செய்வதற்கு வசதி, சுகாதார வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு சுயவேலை வாய்ப்பு பயிற்சி, கைவினை பயிற்சிகள் வழங்கப்படும். ஆத்துக்கடை தெரு பாலம் முதல் மம்சாபுரம் செல்லும் ரோட்டை செப்பனிட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நகரில் அனைத்து பகுதிகளுக்கும் தார், சிமென்ட் சாலை ஏற்படுத்தப்படும். நகராட்சியில் மக்கள் பொழுது போக்குவதற்கு வசதியாக பூங்கா அமைக்கப்படும், என்றார். பெரியசாமி, மாவட்ட காங்.,பொது செயலாளர் வன்னியராஜ், முன்னாள் இளைஞர் காங்., தலைவர் முருகன், முத்து மாரி, சிவபெருமான், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் சீனியம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.