ADDED : ஜூலை 14, 2011 09:43 PM
அவிநாசி : 'தொழில் நசிந்துள்ள சூழ்நிலையில், தமிழக அரசு விதித்துள்ள ஐந்து
சதவீத 'வாட்' வரி மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது,' என்று ஜவுளி
உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவிநாசி ஜவுளி உற்பத்தியாளர் சங்க
தலைவர் முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு விசைத்தறி ஜவுளிக்கு
ஐந்து சதவீத 'வாட்' வரி விதித்துள்ளது. கடந்த ஓராண்டாக நூல் விலை உயர்வு,
தொழிலாளர் பற்றாக்குறை, கடுமையான மின்வெட்டு, ஜவுளிக்கு குறைவான விலை ஆகிய
காரணங்களால் விசைத்தறி தொழில் கடுமையாக பாதித்துள்ளது. இதனால், ஜவுளி
உற்பத்தியை பாதியாக குறைத்து விட்டோம். இக்கட்டான சூழ்நிலையில், தமிழக
அரசு விசைத்தறி ஜவுளிக்கு ஐந்து சதவீத 'வாட்' வரி விதித்துள்ளது அதிர்ச்சி
அளிப்பதாக உள்ளது. இதனால், தொழில் மேலும் நசியும் வாய்ப்பு
அதிகரித்துள்ளது. 50 சதவீத அளவுக்கு வரி ஏய்ப்பு செய்கிறவர்களை தடுத்தாலே,
அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். உண்மையாக வரி செலுத்துபவர்களுக்கும் தொழில்
சீராக நடக்கும்.வெளிமாநிலங்களில் நூல் கொள்முதல் செய்யும்போது முழு வரி
செலுத்தும் நிலையில், தற்போது தமிழக அரசு விதித்துள்ள 'வாட்' வரி, எங்களை
மிகவும் பாதிக்கும். விசைத்தறி தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான மக்களின்
வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு, 'வாட்' வரியை திரும்ப பெற வேண்டும். சங்க
உறுப்பினர்களிடம் கருத்து கேட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து
அறிவிக்கப்படும், என்று கூறியுள்ளார்.


