கல்லூரிகளில் பரவிய கூடங்குளம் போராட்டம்
கல்லூரிகளில் பரவிய கூடங்குளம் போராட்டம்
கல்லூரிகளில் பரவிய கூடங்குளம் போராட்டம்
ADDED : செப் 17, 2011 09:35 PM

நாகர்கோவில்: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான போராட்டம், கல்லூரிகளுக்கும் பரவுவதை தொடர்ந்து, போராட்டங்களுக்கு, போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின்நிலையம், நெல்லை மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், அது கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மிக அருகாமையில் உள்ளது.
இதனால், இந்த விஷயத்தில், கூடங்குளம் மக்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு, குமரி மாவட்ட மீனவர்களும் ஆதரவு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கன்னியாகுமரி மீனவர்கள் ஒரு நாள் கடலுக்கு செல்லாமல், கூடங்குளம் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆபத்தை தரும் அணுஉலை வேண்டாம் என்ற கோஷத்துடன், நாகர்கோவில் புனித சிலுவைக் கல்லூரி மாணவியர், ஊர்வலமாக சென்று, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆவேசமாக கோஷம் போடுவதை பார்த்த போலீசார், சீருடை அணியாத மாணவியரை மிரட்டல் பாணியில் விசாரிக்க தொடங்கினர். இதனால் பயந்து போன மாணவியர், பின், தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். பின்னர் நான்கு மாணவியரை மட்டும் அழைத்து, கலெக்டரிடம் மனு கொடுக்க செய்து விட்டு, அவர்களை கலைந்து போக செய்ததோடு மாணவியர் எங்கு செல்கின்றனர் என்பதை கண்காணிக்க, பெண் சப் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், கூடங்குளம் தொடர்பான போராட்டங்களுக்கு, போலீசார் அனுமதி வழங்க மறுப்பதாகவும், சில இடங்களிலும் பலத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்படுவதாகவும், போராட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.