ADDED : அக் 05, 2011 02:21 AM
சேலம்: ஆயுதபூஜையை முன்னிட்டு, பொரி, கடலை விற்பனை சூடு பிடித்துள்ளது.இன்று நாடு முழுவதும், ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது. பொரி, கடலை மற்றும் வெல்லம் ஆகியவற்றை, மக்கள் ஸ்வாமிக்கு படைத்து வழிபடுவர். ஒரு மாதம் நடக்கக்கூடிய பொரி விற்பனை, ஆயுத பூஜையின் போது, இரண்டே நாளில் விற்பனையை எட்டிவிடும்.சேலம், செவ்வாய்பேட்டை பால் மார்க்கெட் அருகே பாபு பொரி கடை அண்ட் மண்டி உள்ளது. இந்த கடை உரிமையாளர்கள் மாதேஸ்வரர் மற்றும் பாபு கூறியதாவது:ஆண்டுக்கு ஆண்டு பொரி, கடலை விற்பனை அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன், ஒரு மூட்டை பொரி, 250 ரூபாய் இருந்தது. தற்போது, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பக்கா பொரி, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பொட்டுக்கடலை இரண்டு மாதத்துக்கு முன், 40 ரூபாய் இருந்தது. தற்போது, 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஈரோடு, சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பொட்டுக்கடலை பெறப்படுகிறது.
நிலக்கடலை விற்பனையில் மாற்றமில்லை. பல மாதமாக ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.டீலக்ஸ் நைலான் அவுல் ஒரு கிலோ, 40 ரூபாய், நாட்டு சர்க்கரை ஒரு கிலோ, 30 முதல், 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. எள் உருண்டை, கடலை உருண்டை ஒரு பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மூன்று நாட்களாக பொரி விற்பனை சூடு பிடித்துள்ளது. சில்லரை வியாபாரிகளும், பல்வேறு தொழிற்சாலை நிறுவனத்தினரும் எங்களிடம் மூட்டை மூட்டையாக பொரி வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


