Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/நாடு தழுவிய லாரி ஸ்டிரைக்: இன்று முக்கிய முடிவு

நாடு தழுவிய லாரி ஸ்டிரைக்: இன்று முக்கிய முடிவு

நாடு தழுவிய லாரி ஸ்டிரைக்: இன்று முக்கிய முடிவு

நாடு தழுவிய லாரி ஸ்டிரைக்: இன்று முக்கிய முடிவு

ADDED : ஆக 22, 2011 02:39 AM


Google News
வேலூர் : லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்காவிட்டால், நாடு தழுவிய ஸ்டிரைக் துவங்கும் என, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா கூறினார்.

அது குறித்து, இன்று முக்கிய முடிவு எடுக்கப்படும் என்ற அவர், தற்போது நடைபெறும் ஸ்டிரைக்கால், தமிழக அரசுக்கு, தினமும் 160 கோடி ரூபாய் 'வாட்' வரி இழப்பு என்றும் தெரிவித்தார். வேலூரில், நேற்று அவர் கூறியதாவது: பா.ஜ., ஆட்சியில், பிரதமர் வாஜ்பாய் தங்க நாற்கர சாலைத் திட்டத்தைத் தொடங்கினார். இதற்கான செலவுத் தொகையாக, 30 ஆயிரம் கோடி ரூபாய் சுங்க வரியாக வசூலிக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், 4 லட்சம் கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில், 89 சதவீதம் லாரிகளும், 11 சதவீதம் பஸ்கள், வேன்களும் செல்கின்றன. ஏழு ஆண்டுகள் வரை, சுங்கவரி வசூலிப்பது என்றும், அதன் பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்றும், ஒரு கிலோ மீட்டருக்கு 70 பைசா வரியாக வசூலிப்பது என்றும், மத்திய அரசு அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்துடன், 1997ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டது. ஒப்பந்தம் செய்த போது, 4 வகையாக வாகனங்கள் பிரிக்கப்பட்டன. அதன் பின், 6 வகையாகப் பிரிக்கப்பட்டன. இதை, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்த்தனர். அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த வாகனங்கள், அந்தந்த மாவட்டங்களில் செல்லும் போது, 50 சதவீதம் சுங்க வரியில் தள்ளுபடி வழங்க வேண்டும் என்று, 2010ம் ஆண்டு மீண்டும் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி நள்ளிரவு முதல், தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் ஸ்டிரைக் செய்து வருகின்றனர். இதனால், சென்னையிலிருந்து பெங்களூரு வரை, 7 ஆயிரம் லாரிகள் இயங்கவில்லை. 232 லாரிகள் மட்டுமே இயங்கின. 98 சதவீத லாரிகள் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டன. இதனால், தமிழக அரசுக்கு தினமும், 160 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று (ஆக.,22), டில்லியில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகிகளுடன், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில், உடன்பாடு ஏற்படாவிட்டால், ஒரு வாரம் கழித்து, அகில இந்திய அளவில் லாரிகள் ஸ்டிரைக் தொடங்கும். இதில், 26 லட்சம் லாரிகள் பங்கேற்கவுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us