/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகரிப்புகோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகரிப்பு
கோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகரிப்பு
கோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகரிப்பு
கோவை மாவட்டத்தில் 7 பேரூராட்சிகளில் வார்டு எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : ஜூலை 19, 2011 09:22 PM
அன்னூர் : அன்னூர் பேரூராட்சியில் வார்டு எண்ணிக்கையை 15லிருந்து 18 ஆக உயர்த்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பேரூராட்சிகளின் இயக்குனரகம் மக்கள் தொகை அடிப்படையில் பேரூராட்சிகளில் வார்டுகளை சீரமைக்க திட்டமிட்டுள்ளது. 2001ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 6,000 வரை உள்ள பேரூராட்சிகளில் 12 வார்டு உறுப்பினர்களும், 6001 முதல் 15 ஆயிரம் வரை உள்ள பேரூராட்சிகளில் 15ம், 15 ஆயிரத்துக்கு மேல் 25 ஆயிரம் வரை உள்ள பேரூராட்சிகளில் 18ம், 25 ஆயிரம் பேருக்கு மேல் மக்கள் தொகை உள்ள பேரூராட்சிகளில் 21 வார்டு உறுப்பினர்களும் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதன்படி, பேரூராட்சிகள் தங்கள் பகுதியில் உள்ள மக்கள் தொகையின்படி புதிய வார்டுகளுக்கான பகுதிகளை பிரித்து அனுப்பும்படி அறிவுறுத்தியது. கோவை மாவட்டத்தில் 44 பேரூராட்சிகள் உள்ளன. இதில் மாநகராட்சி விரிவாக்கத்தில் சரவணம்பட்டி, சின்னவேடம்பட்டி உள்ளிட்ட ஏழு பேரூராட்சிகள் சேர்ந்து விடுகின்றன. மீதமுள்ள 37 பேரூராட்சிகளில் ஏழு பேரூராட்சிகளில் 2001 மக்கள் தொகையின் அடிப்படையில் வார்டு உறுப்பினர்கள் எண்ணிக்கை மாற்றப்படுகிறது. அன்னூர் பேரூராட்சியில் 2001 மக்கள் தொகைப்படி 9,051 ஆண்களும், 9001 பெண்களும் என 18 ஆயிரத்து 52 பேர் உள்ளனர். புதிய விதியின்படி, தற்போதுள்ள 15 வார்டுகள் 18 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வார்டு பிரிக்கும் பணி நடந்தது. இதில் 15 வார்டுகளின் எல்லைகளில் மாற்றம் செய்யப்பட்டு 18 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் வார்டு 9 மற்றும் 11 அதிக அளவில் மாற்றத்துக்கு உள்ளானது. மற்ற வார்டுகளில் சில பகுதிகள் மட்டும் பிரிக்கப்பட்டு கூடுதலாக மூன்று வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய வார்டுகள் பிரிக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கும் பேரூராட்சியின் சிறப்பு கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. துணை தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில கவுன்சிலர்கள் தங்கள் பகுதியில் வார்டு பிரிக்கப்பட்டதில் சில திருத்தங்கள் தெரிவித்தனர். இத்திருத்தங்கள் பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செயல் அலுவலர் ஜெகதீசன் கூறுகையில்,''கூடுதல் வார்டுகள் பிரிக்கப்பட்ட தீர்மானம் அரசுக்கு அனுப்பப்படுகிறது. அரசு ஒப்புதல் கிடைத்தபின் அமலாகும். இதன் மூலம் ஏற்கனவே பெண்களுக்கு உள்ள ஐந்து வார்டுகள் ஆறாக அதிகரிக்கும்,'' என்றார். வார்டுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசியல் கட்சிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மூன்று பேர் கவுன்சிலராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.


