Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பேபாளையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் :மின்வாரிய தலைமை பொறியாளர் தகவல்

குப்பேபாளையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் :மின்வாரிய தலைமை பொறியாளர் தகவல்

குப்பேபாளையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் :மின்வாரிய தலைமை பொறியாளர் தகவல்

குப்பேபாளையத்தில் சோலார் மின் உற்பத்தி நிலையம் :மின்வாரிய தலைமை பொறியாளர் தகவல்

ADDED : ஜூலை 13, 2011 10:10 PM


Google News
கோவை : குப்பேபாளையம் பகுதியில், சூரிய ஒளி மூலம் ஒரு மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் தங்கவேலு கூறியதாவது: தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டலம் சார்பில், புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் துணை மின்நிலைய வளாகங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். கடந்த மாதம் ஆர்.எஸ்.புரம் துணை மின்நிலைய வளாகத்தில் 40 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். வரும் டிசம்பர் மாதத்துக்குள் 600 மரக்கன்றுகளை நட திட்டமிட்டு, அதன்படி செயல்பட்டு வருகிறோம். பெயர் மாற்ற முகாமில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் ஒரு மரக்கன்று வீதம் வழங்கி வருகிறோம். கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 26 முதல் 30 மில்லியன் யூனிட் மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. அடுத்த மூன்றாண்டுகளில் தேவை இருமடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்கால தேவையை சமாளிக்கும் வகையில், ஒரு துணை மின்நிலையத்துக்கு 75 கோடி ரூபாய் வீதம் கோவை (மின்வாரிய தலைமை அலுவலகம் எதிரில்), கருவலூர், திருப்பூர், சிந்தாமணிப்புதூர், காங்கேயம், காரமடை உள்ளிட்ட பகுதிகளில் 230 கே.வி., துணை மின்நிலையங்கள் அமைக்க உள்ளோம். காரமடையில் இதற்கான பணி துவங்கிவிட்டது. குப்பேபாளையம் பகுதியில், 'நியூமெரிக்கல் பவர் சிஸ்டம்ஸ்' நிறுவனம் சார்பில், சூரிய ஒளி மூலம் ஒரு மெகா வாட் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. மின்சக்தி சிக்கன நகரமாக கோவையை மாற்றும் வகையில் நாட்டில் முதல் முறையாக பள்ளி மாணவர்கள் ஒரு லட்சம் பேரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டம், 'பவர்புல் கோவை' சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு மாத காலத்தில் மின்வாரிய அதிகாரிகள் 180 பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் மின்சக்தி விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். அவர்களிடம் கொடுக்கப்படும் கருத்துக் கேட்பு படிவத்தை பெற்றோர் கையொப்பத்துடன் திரும்ப பெற்று வருகிறோம். மின்சக்தி சிக்கனத்தில் சிறந்து விளங்கும் வீடுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆண்டுதோறும் டிச., 14ல் துவங்கி 20 வரை நடக்கும், 'மின்சக்தி சிக்கன வார விழா' நிகழ்ச்சியில் பரிசு வழங்க உள்ளோம். 305 கோடி ரூபாய் மதிப்பில் புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைத்தல், தரைவழி கேபிள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாடுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்தில், நகர எல்லைக்கு உட்பட்ட 110 கி.மீ.,க்கு தரைவழி கேபிள் பதிக்க உள்ளோம்.இவ்வாறு, தங்கவேலு தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us