/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/சாலை விதிகள் மீறல்: கலெக்டர் எச்சரிக்கைசாலை விதிகள் மீறல்: கலெக்டர் எச்சரிக்கை
சாலை விதிகள் மீறல்: கலெக்டர் எச்சரிக்கை
சாலை விதிகள் மீறல்: கலெக்டர் எச்சரிக்கை
சாலை விதிகள் மீறல்: கலெக்டர் எச்சரிக்கை
ADDED : ஜூலை 19, 2011 12:18 AM
கிருஷ்ணகிரி: ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை விதிகளை கடைப்பிடிக்காத வாகன ஓட்டுனர்கள் மீது மோட்டார் வாகன விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என கலெக்டர் மகேஸ்வரன் எச்சரித்துள்ளார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரியில் பெங்களூரு-கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி-சென்னை, கிருஷ்ணகிரி- விழுப்புரம், கிருஷ்ணகிரி-குப்பம், ஓசூர்-சர்ஜாபூர் ஆகிய ஐந்து தேசிய நெடுஞ்சாலைகள் சங்கமிக்கின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டுனர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகிறது.இது குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து புகார் எழுந்துள்ளது. குறிப்பாக கனரக வாகனங்கள் பொதுவழிச்சாலையில் வலதுபுறமாகவே செல்வதால் விபத்துகள் நடப்பதாகவும் புகார் வந்தது.
மத்திய மோட்டார் வாகன விதி118-உட்பிரிவு 2ன் படி எந்தஒரு ஓட்டுனரும், தமது வாகனத்தை ,சாலையில் இடது புறமாக எதிர் திசையில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டும். அதே போல் தாம் செல்லும் வழித்தடத்தை திடீரென்று மாற்றக்கூடாது. எனவே புகாரில் கூறப்பட்டுள்ளது போல் நிறைய கனரக வாகனங்கள் சாலை விதியினை பின்பற்றாமலும், வலதுபுறமாகவே செல்வதால் பல விபத்துளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்ட நிர்வாகம், வட்டார போக்குவரத்து துறை, மற்றும் போலீஸார் ஆகியோர் இணைந்து பல்வேறு நடவடிக்கைளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக போலீஸ் துறை வாகனங்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கனரக வாகனங்களை பின்தொடர்ந்து குற்றங்களை கண்டுபிடித்து வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுக்க அதி வேக கார்கள் தயார் நிலையில் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் நவீன கேமராக்கள் பொறுத்தி கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓசூர் எல்லையில் இருந்து சேலம் சாலையில் சப்பாணிப்பட்டி, கிருஷ்ணகிரி எல்லை வரையிலும் மற்றும் சென்னை சாலையில் பர்கூர் பிரிவு கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை வரையிலும் நெடுஞ்சாலை ரோந்து பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, கனரக லாரிகள், பஸ்கள் மற்றும் இதர வாகனங்கள் வலது புறமாகவே செல்வது கண்டுபிடிக்கப்பட்டால் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி அதிக பட்ச தண்டனையாக ஓட்டுனர்களுக்கு முதல் குற்றத்திற்கு 6 மாத சிறை தண்டனை அல்லது ஆயிரம் ரூபாய் அபராதம், தொடர் குற்றத்திற்காக இரண்டு வருட சிறை தண்டனை அல்லது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.கிருஷ்ணகிரி நகரில் அனுமதி பெறாமல் இயங்கும் ஆட்டோக்கள் மற்றும் ஆட்டோவில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஆர்.டி.ஓ., தலைமையில் ஆய்வு நடத்தப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.