ADDED : செப் 13, 2011 12:45 AM
திண்டிவனம் : விபத்து நஷ்டஈடு வழங்காததால் கோர்ட் உத்தரவுப்படி திண்டிவனத்தில் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.
திண்டிவனம் கிடங்கல் 1 பகுதியை சேர்ந்த தங்கவேலு மகன் கஜேந்திர பூபதி. பஸ் செக்கராக இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு செப்டம்பரில் திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கும்பகோணம் கோட்ட அரசு பஸ் மோதியதில் கஜேந்திரபூபதி இறந்தார். இவரது மனைவி தமிழரசி, விபத்து இழப்பீடு கோரி திண்டிவனம் விரைவு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மனுதாரருக்கு 5 லட்சத்து 25 ஆயிரத்து 500 ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி கோர்ட் உத்தரவிட்டது. இதன் பிறகும் வட்டித்தொகை சேர்த்து 8 லட்சத்து 16 ஆயிரத்து 672 ரூபாய் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு, கடந்த மாதம் 18ம் தேதி நீதிபதி ஸ்டாலின் செல்வராஜ் உத்தரவிட்டார். நேற்று காலை 11 மணிக்கு, திண்டிவனம் செஞ்சி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கும்பகோணம் கோட்ட அரசு பஸ்சை, சீனியர் கட்டளை நிறைவேற்றுனர் மீரா முன்னிலையில் ஜப்தி செய்தனர்.