Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு: உற்சாகமற்ற உடன் பிறப்புகள்!

உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு: உற்சாகமற்ற உடன் பிறப்புகள்!

உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு: உற்சாகமற்ற உடன் பிறப்புகள்!

உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனு: உற்சாகமற்ற உடன் பிறப்புகள்!

ADDED : செப் 06, 2011 11:11 PM


Google News

கோவை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு, நேற்றிலிருந்து தி.மு.க.,வினரிடம் வாங்கப்படுகிறது; அஷ்டமி நாளான நேற்று யாரும் மனு கொடுக்கவில்லை.



உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படும் நிலையில், போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடமிருந்து முக்கியக் கட்சிகள் சார்பில் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

அ.தி.மு.க.,வும், தே.மு.தி.க.,வும்தான் முதலில் விருப்ப மனுக்களை வாங்கத் துவங்கின. கோவை இதயதெய்வம் மாளிகையில், கடந்த 2ம் தேதியிலிருந்து மாநகர் மாவட்டம் மற்றும் புறநகர் மாவட்டங்கள் சார்பில், தனித்தனியாக விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன. கோவை மேயர் பதவிக்குத்தான் அதிக அளவிலான போட்டி காணப்படுகிறது. நேற்று வரையிலும், 25 பேர் இந்த பதவிக்கு போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அஷ்டமி நாளான நேற்று, மேயர் பதவிக்குப் போட்டியிட யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. ஆனால், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட நேற்றும் 22 பேர் மனு கொடுத்தனர். புறநகர் மாவட்டத்தில் குறைவாகவே மனுக்கள் வந்துள்ளன.



அஷ்டமியும், உடன் பிறப்புகளும்: கோவை மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள், செப்., 5லிருந்து மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் விருப்ப மனு கொடுக்கலாம் என்று கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் அறிவித்திருந்தார். இதற்கான மனுக்கள், கடந்த வாரத்திலிருந்தே வினியோகிக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்ட தி.மு.க., செயலர் பொங்கலூர் பழனிச்சாமி, எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை; மாநகர் மாவட்டச் செயலர் வீரகோபால், சிறையில் இருக்கிறார். இதனால், விருப்ப மனுக்களை வாங்குவதற்காக, சென்னையிலிருந்து தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகி செல்வராஜ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று கோவை வந்து விட்டார். கட்சியின் மூத்த தலைவர்களான ராமநாதன், கண்ணப்பன், மாவட்டப் பொருளாளர் நாச்சிமுத்து ஆகியோர், அவருக்கு உதவியாக பணியாற்றி வருகின்றனர். முதல் நாளான நேற்று, தி.மு.க.,வின் முக்கிய நிர்வாகிகள் உட்பட யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை. அஷ்டமி என்பதால், யாரும் விருப்ப மனு கொடுக்கவில்லை என்ற 'உண்மையை' உடைத்தார் ஓர் உடன் பிறப்பு. இன்று நவமி என்பதால், இன்றும் விருப்ப மனு கொடுப்பது சந்தேகமே. மாநகராட்சி மேயருக்கு 20 ஆயிரம் ரூபாய், கவுன்சிலருக்கு ஐந்தாயிரம் ரூபாய், நகராட்சித் தலைவருக்கு 10 ஆயிரம் ரூபாய், நகராட்சி கவுன்சிலருக்கு இரண்டாயிரம் ரூபாய், பேரூராட்சி கவுன்சிலருக்கு 500 ரூபாய் என விருப்ப மனுவுடன் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலருக்கு ஐந்தாயிரம் ரூபாய், ஒன்றியக் கவுன்சிலருக்கு ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் பெண்கள், இதில் பாதித்தொகையை செலுத்தினால் போதுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.



எதிர்க்கட்சி உற்சாகம்: அ.தி.மு.க.,வுக்கு அடுத்ததாக, தே.மு.தி.க.,வில்தான் அதிகமானவர்கள், உற்சாகத்துடன் விருப்ப மனு கொடுத்து வருகின்றனர். வடக்கு மாவட்டத்தில் 6 ஒன்றியங்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி, 20 பேரூராட்சிகளில் போட்டியிட 300க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு கொடுத்திருப்பதாக, வடக்கு மாவட்டச் செயலர் பாண்டியன் தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் மேயர் பதவிக்குப் போட்டியிட 25 பேரும், கவுன்சிலராகப் போட்டியிட 70 பேரும் விருப்ப மனு கொடுத்திருப்பதாக மாநகர் மாவட்டச் செயலர் தமிழ்முருகன் கூறினார். மாநிலக்கட்சிகளில் உள்ளாட்சித் தேர்தல் உற்சாகம், களை கட்டியிருக்கும் நிலையில், தேசியக் கட்சிகளில் பா.ஜ.,வைத் தவிர, மற்ற கட்சிகளில் தேர்தல் களையே தெரியவில்லை.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us