/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சிறை காவலர்கள் அச்சம், கைதிகளின் போன் பேச்சு :விழிக்குமா, தமிழக அரசுசிறை காவலர்கள் அச்சம், கைதிகளின் போன் பேச்சு :விழிக்குமா, தமிழக அரசு
சிறை காவலர்கள் அச்சம், கைதிகளின் போன் பேச்சு :விழிக்குமா, தமிழக அரசு
சிறை காவலர்கள் அச்சம், கைதிகளின் போன் பேச்சு :விழிக்குமா, தமிழக அரசு
சிறை காவலர்கள் அச்சம், கைதிகளின் போன் பேச்சு :விழிக்குமா, தமிழக அரசு
ADDED : செப் 23, 2011 09:44 PM
கோவை : தடை செய்யப்பட்ட பொருட்களின் ஊடுருவல், கோவை மத்திய சிறையில்
அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. 'கைதிகளிடம் மொபைல் போன்கள் அதிகளவில்
புழங்குவது ஆபத்தானது' என அச்சம் தெரிவித்துள்ளனர் சிறைக் காவலர்கள்.
தமிழகத்தில் ஒன்பது மத்திய சிறைகள், மூன்று பெண்கள் சிறைகள், 11
'பார்ஸ்டல்' பள்ளிகள், ஐந்து சிறப்பு கிளைச் சிறைகள், ஆறு மாவட்டச்
சிறைகள், 98 கிளைச்சிறைகள், இரு திறந்தவெளிச் சிறைகள் உள்ளன. தண்டனை
கைதிகள், விசாரணைக் கைதிகள், தடுப்புக்காவல் கைதிகள் உட்பட 17 ஆயிரம் பேர்
அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில் மட்டும் ஏறத்தாழ 2,000 கைதிகள்
உள்ளனர்.
தடை செய்யப்பட்ட பொருட்கள் பெரும்பாலும், கைதிகளை சந்தித்து நலம் விசாரிக்க
வரும் உறவினர்களாலும், கைதிகளுக்கான காவல் பணியில் ஈடுபடும் காவலர்களில்
சிலராலும் சிறைக்குள் கடத்தப்பட்டு கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக
கூறப்படுகிறது. ஒரு பீடி 5 ரூபாய், சிகரெட் 15 ரூபாய், புகையிலை பாக்கெட்
25 ரூபாய், கஞ்சா 100 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், வெளியில் இருக்கும்
உறவினர்களை தொடர்பு கொண்டு பேச மொபைல் போன் அழைப்பு ஒன்றுக்கு 50 முதல் 75
ரூபாய் வரை கைதிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
சிறைக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, புகையிலை பாக்கெட்கள்,
மொபைல் போன், சார்ஜர்களை நன்றாக 'பேக்கிங்' செய்து சிறு, சிறு மூட்டையாக
மத்திய சிறையின் பாதுகாப்புச் சுவரை கடந்து வீசப்படுவதாகவும், அவற்றை
கைதிகள் அல்லது காவலர்கள் எடுத்துச் சென்று பதுக்கி விற்பதாகவும்
கூறப்படுகிறது. இதுபோன்று சில, மாதங்களுக்குமுன் வெளியில் இருந்து சிறை
வளாகத்துக்குள் வீசப்பட்ட மொபைல் போன் மற்றும் சார்ஜர்கள் சிறை காவலர்களால்
கைப்பற்றப்பட்டது. எனினும், இவற்றை வீசிய நபர்கள் யார், கடத்தலுக்கு
ஒத்துழைத்த கைதிகள், காவலர்கள் யார் என அதிகாரிகளால் இன்னமும் கண்டறிய
முடியவில்லை. கடந்த இரு மாதங்களில் மட்டும் 10க்கும் மேற்பட்ட மொபைல்
போன்கள் கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து
சிறைக்காவலர்கள் சிலர் கூறியதாவது: கைதிகளில் பலரும் மது, பீடி - சிகரெட்,
புகையிலை, கஞ்சா புகைக்கும் பழக்கமுடையவர்கள். அவர்களால் 24 மணி நேரமும்
வெறுமனே 'சும்மா' இருக்க முடியாது. எப்படியாவது தங்களுக்கு தேவையான தடை
செய்யப்பட்ட பொருட்களை சிறைக்குள் பெற பல விதத்திலும் முட்டி
மோதுகின்றனர். இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் கைதிகளும், சில
காவலர்களும் சிறைக்குள் அவற்றை கடத்தி கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
இப்பொருட்களின் புழக்கத்தை விட, மொபைல் போன் புழக்கம் மிக, மிக ஆபத்தானது.
உள்ளே சிறைபட்டிருக்கும் கைதிகள், வெளியே இருக்கும் கூட்டாளிகளுடன் போனில்
பேசுகின்றனர். சிறைக்குள் தங்களுக்கு நெருக்கடி தரும் காவலர்களை பற்றிய
தகவல்களை கூறி, குடும்பத்தினரை மிரட்டவும் துணிகின்றனர். இதனால்,
சிறைக்குள் மொபைல் போன் புழக்கத்தை முற்றிலுமாக தடை செய்ய தமிழக அரசு கடும்
நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறைக்குள் எந்த ஒரு நபரும் மொபைல் போனை
பயன்படுத்த முடியாதபடி, சக்தி வாய்ந்த மொபைல் ஜாமர்களை உடனடியாக நிறுவ
வேண்டும். அதுவரை, கைதிகளின் 'லாக்கப்'களை தொடர்ச்சியாக சோதனையிட்டு, தடை
செய்யப்பட்ட பொருட் களை உடனுக்குடன் கைப்பற்றுவதற்கான உறுதியான நடவடிக்கையை
மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, காவலர்கள் தெரிவித்தனர்.