PUBLISHED ON : ஜூலை 13, 2011 12:00 AM

இது புத்தகம்; அது வாக்குமூலம்!
தி.மு.க., முன்னாள் எம்.பி., இரா.செழியனின், 22 ஆண்டுகால பார்லிமென்ட் உரை தொகுப்பு, 'மக்களுக்காக பாராளுமன்றம்' என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது. புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது.சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி நடராஜன், 'இந்து' ராம், பத்திரிகையாளர் சோ உட்பட பலர் பங்கேற்றனர். இதில், சோ பேசும்போது, 'செழியனை 40 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். அவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் இல்லை... 'டிவி' நெட்வொர்க் இல்லை... சுவிஸ் வங்கியில் அக்கவுன்ட் இல்லை... அரசியல்வாதிக்கான அடிப்படை தகுதிகளான இவை இல்லாமல், இவர் எப்படி, 20 ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்தார் என்றே எனக்கு தெரியவில்லை' என, தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் பேசியதும், அரங்கமே கைதட்டியது.அப்போது, பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர், 'அதனால தான் இவரது பேச்சு புத்தகமாக வருது... வேறு சிலரது பேச்சு, கோர்ட், 'ரெக்கார்டுல' வாக்குமூலமா ஏறுது...' என, 'கமென்ட்' அடித்தார்.
வழக்கறிஞராக மாறிய கிருஷ்ணசாமி!
ஒட்டப்பிடாரம் தொகுதியில், தனியார் பட்டா நிலங்களில், நிலத்தடி நீரை அளவுக்கதிகமாக உறிஞ்சுவதை எதிர்த்து, மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு ஒன்று தாக்கலானது. தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் கிருஷ்ணசாமி, தன்னையும் மனுதாரராக இணைத்துக் கொண்டார். எதிர்தரப்பில், தனியார் நிறுவனங்களும் மனு செய்தன.இந்த வழக்கு நடந்த ஆறு நாட்களும், கிருஷ்ணசாமி நேரில் ஆஜராகி, அவரே வாதாடினார். ஐகோர்ட் நீதிபதிகளை, 'மை லார்டு' என, வக்கீல்கள் அழைப்பர். ஆனால், கிருஷ்ணசாமி, 'சார்' என அழைத்து, நிலத்தடி நீரை எடுப்பதால் ஏற்பட்ட பாதிப்புகளை, நீதிபதி ஆர்.சுதாகர் முன் விவரித்தார். அவரது வருகையால், அவரது கட்சியினரும் ஆறு நாட்களும் திரண்டதால், ஐகோர்ட் வளாகமே பரபரப்பாக இருந்தது. ஒருவழியாக, அவர் எதிர்பார்த்தபடி, ஐகோர்ட் உத்தரவு சாதகமாக வந்ததும், மகிழ்ச்சியை தொண்டர்கள் கொண்டாடினர்.உடனே, புதிய தமிழகம் கட்சி தொண்டர் ஒருவர், 'இனிமேல் அண்ணனுக்கு, 'நீதிவென்ற வேந்தனே'ன்னு பட்டம் சூட்டிட வேண்டியது தான்...' என, 'கமென்ட்' அடித்துவிட்டு கிளம்பினார்.


