Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பட்டையக் கணக்காளர்களுக்கான பத்து நுட்பங்கள்

பட்டையக் கணக்காளர்களுக்கான பத்து நுட்பங்கள்

பட்டையக் கணக்காளர்களுக்கான பத்து நுட்பங்கள்

பட்டையக் கணக்காளர்களுக்கான பத்து நுட்பங்கள்

ADDED : ஆக 20, 2011 11:31 PM


Google News
கோவை:''பட்டையக் கணக்காளர்கள் (ஆடிட்டர்கள்), 'ஆடிட்டிங் கமிட்டி' உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்டோரின் குணநலன்கள் மற்றும் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும்'' என்று, முன்னணி இந்திய நிறுவனங்கள் பலவற்றுக்கு ஆடிட்டராக உள்ள அனேஜா அசோசியேட்ஸ் நரரேந்திர குமார் அனேஜா பேசினார்.இந்தியப் பட்டய கணக்காளர்களின் 43வது மண்டல மாநாடு, கோவை கொடீசியா வளாகத்தில் நடந்தது. மாநாட்டின் இரண்டாம் நாளான நேற்று, 'பட்டையக் கணக்காளர் தொழிலில் நன்னெறிக் கோட்பாடுகள்' என்னும் தலைப்பில் ஆனைகட்டி அர்ஷ வித்ய குருகுலத்தின் சுவாமினி பிரம்மலீலானந்தா பேசினார். நன்னெறிகள் குறித்த நல்ல துவக்கம், ஏற்படுத்திய உற்சாகம் நாள் முழுதும் நீடிக்க, ஆடிட்டிங் துறை சார்ந்த பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் கருத்துரையாற்றினர்.

சிறந்த தணிக்கைக்கான பத்து நுட்பங்கள் என்னும் தலைப்பில் நரேந்திர குமார் அனேஜா பேசியது: பட்டையக் கணக்காளர்கள், 'ஆடிட்டிங் கமிட்டி' உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உள்ளிட்டோரின் குணநலன்கள் மற்றும் பின்புலம் குறித்து அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆடிட்டிங் கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தான் விரும்பும் திசையில் குழுவை வழிநடத்த விரும்புவார்கள்; அத்தகைய சூழலைக் கையாள அவர்களின் குணநலன்கள் மற்றும் பின்புலம் குறித்த புரிதல் உதவியாக இருக்கும்.

தனிப்பட்ட முறையில், 'ஆடிட்டிங் கமிட்டி' உறுப்பினர்களுடனான உறவை மேம்படுத்திக் கொள்வதன் மூலம் அவர்களின் கவனத்தை ஈர்ப்பது எளிதாகும். தணிக்கைக்குச் செல்லும் நிறுவனங்களின் வர்த்தகம் மற்றும் ஒழுங்கு விதிகள் குறித்தும், அந்நிறுவனங்கள் எதிர் நோக்கியுள்ள சிக்கல்கள் குறித்தும் பட்டையக் கணக்காளர்கள் தெளிவாக அறிந்து தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஆடிட்டிங் கமிட்டியின் நடவடிக்கைகளையும், உறுப்பினர்களின் 'உடல் மொழி'யின் மூலம் அவர்கள் உள்ளத்தில் இருப்பதையும் புரிந்து கொண்டு வழிநடத்த கற்றுக் கொள்ள வேண்டும், என்றார்.சர்வதேச வரிவிதிப்பு மற்றும் அது தொடர்பான பயிற்சி முறை என்னும் தலைப்பில் ஆடிட்டர் ஓஸ்வால் பேசியது: நிறைய வெளிநாட்டவர்கள் தொழில் நிமித்தம் இந்தியாவிற்கு வருகின்றனர். இந்தியாவில் இருந்தும் பலர் மென்பொருள் துறை உள்ளிட்ட துறைகளுக்கு வேலைக்குச் செல்கின்றனர். இது தவிர, ஏற்றுமதி, இறக்குமதி செயல்பாடுகள், சர்வதேச வரி விதிப்பு மற்றும் அது குறித்த தொடர் பயிற்சிகள், புதிய நடைமுறைகள், புதிய சட்டங்கள் அனைத்திலும் நிபுணத்துவம் பெறுவதன் மூலமே அடுத்த தலைமுறை செயல்பாடுகளில் பங்கேற்பது சாத்தியமாகும். சர்வதேச வரிவிதிப்பை புரிந்து கொண்டு பின்பற்றுவது பெரிய சிரமமல்ல; அதற்குரிய திறமைகளை வளர்த்துக் கொண்டால் போதுமானது, என்றார்.ஆடிட்டர் வேத்ஜெய் பேசுகையில், ''பட்டையக் கணக்காளர்களின் மண்டல மாநாடுகள் இந்தியா முழுவதும் நடந்த போதிலும், கோவையைப் போன்று வேறு எந்த பகுதியிலும் நடக்கவில்லை. கோவை 'ஏர் கண்டிசன்' நகரம்; ஆண்டு முழுதும் அற்புத வானிலை நிலவும் இந்த நகரின் சிறப்பான உட்கட்டமைப்புகளும் பார்க்க வேண்டிய இடங்களும் என்னைக் கவர்ந்துள்ளன'' என கோவையின் சிறப்பு குறித்து சிலாகித்துப் பேசிய இவர், இந்தியாவில் வரி விதிக்கும் முறை துவங்கி நூற்றி ஐம்பது ஆன நிலையிலும் இதன் அவசியம் குறித்து புரியாத நிலை நீடிக்கிறது,'' என்றார்.நிறைவு விழா: மாநாட்டின் நிறைவு விழா, நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்தது. தென்னிந்திய பட்டையக் கணக்காளர் சங்க தலைவர் சண்முக சுந்தரம் வரவேற்றார்; அகில இந்தியத் தலைவர் ராமசாமி தலைமை தாங்கி பேசினார்.

இதைத் தொடர்ந்து, 750 க்கும் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கிளைகள் 'ஏ', 300 லிருந்து 750 வரை உறுப்பினர்களைக் கொண்ட கிளைகள் 'பி', 300க்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட கிளைகள் 'சி' என மூன்றாக பகுக்கப்பட்டு, அதில் பிரிவு வாரியாக, 2010-11 ம் ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய கிளைகளுக்கு பரிசளிக்கப்பட்டன. 'ஏ' பிரிவில் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் கிளைகளுக்கும், 'பி' பிரிவில் மதுரை மற்றும் திருச்சூர் கிளைகளுக்கும், 'சி' பிரிவில் தூத்துகுடி கிளைக்கும் பரிசுகள் அளிக்கப்பட்டன. மாணவர்களுக்காக ஆற்றிய பணிகளின் அடிப்படையில்,'ஏ' பிரிவில் பெங்களூர் கிளைக்கும், 'பி' பிரிவில் திருச்சூர் கிளைக்கும், 'சி' பிரிவில் ஹுப்ளி கிளைக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆடிட்டர் முரளி நன்றி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us