Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/துரித கதியில் தயாராகுது வியாசர்பாடி மேம்பாலம்

துரித கதியில் தயாராகுது வியாசர்பாடி மேம்பாலம்

துரித கதியில் தயாராகுது வியாசர்பாடி மேம்பாலம்

துரித கதியில் தயாராகுது வியாசர்பாடி மேம்பாலம்

ADDED : ஜூலை 21, 2011 12:39 AM


Google News
வியாசர்பாடி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் கட்டப்படும், மேம்பாலப் பணிகள் துரித கதியில் நடந்து வருவதால், குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.வடசென்னையின் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையில், எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை முக்கியமானது. சென்னை துறைமுகம் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு வரும் வானங்களுக்கு, இந்த சாலை தான் பிரதானமாக உள்ளது. இந்த நெடுஞ்சாலையில், வியாசர்பாடி பகுதியில் உள்ள ரயில்வே பாலம் குறுகலாக உள்ளதால், போக்குவரத்து பிரச்னை பெரிதாக உள்ளது. வாகனங்கள் அவ்வப்போது மேம்பாலச் சுவரில் மோதி நிற்கும் சம்பவங்களும் நடக்கின்றன.இதுதவிர, மழைக்காலங்களில் ரயில்வே பாலப்பகுதி தாழ்வாக உள்ளதால், ஏரிபோல் தண்ணீர் தேங்கி விடுகிறது. டூவீலர்கள் அந்த இடத்தைக் கடக்க முடியாத நிலை ஏற்பட்டு, சைக்கிள் ரிக்ஷாக்களில் ஏற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சிக்கல்களுக்கு தீர்வு காணும் வகையில், 80.68 கோடி ரூபாயில், ரயில்வே பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறை அறிவித்தது. இந்தப் பணிகள் தற்போது துரித கதியில் நடந்து வருகின்றன.இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறியதாவது:போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த சாலை என்பதால், கட்டுமான பணியை குறித்த காலத்திற்குள் முடிக்க முயன்று வருகிறோம். இதற்காக ஏற்கனவே தயாரித்து வைக்கப்பட்ட, கான்கிரீட் பீம்களை பில்லர்களில் பொருத்தும்,'பி.எஸ்.சி., கிராட்டர்' முறையில் பணிகள் நடக்கின்றன. இந்த முறையால் கால விரயம் தவிர்க்கப்பட்டு, 40 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

நிலம் கையகப்படுத்தும் பணி தாமதமாக நடக்கிறது. மேலும் சர்வீஸ் சாலை, மழைநீர் வடிகால் போன்றவை மின்வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் வருவதால், அவர்களின் ஒப்புதலுக்காகவும் காத்திருக்கிறோம். இதற்கான அனுமதி கிடைத்தவுடன், பணிகளை விரைந்து முடிப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.பொதுவாக அரசு சம்பந்தப்பட்ட கட்டுமான பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்காமல், ஒப்பந்த காலத்தை நீட்டிப்பதே வழக்கம். பெரம்பூர் மேம்பாலப் பணிகள் அரசியல் சர்ச்சையில் சிக்கி, 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. ஆனால், வியாசர்பாடி மேம்பால பணியைப் பொறுத்தவரை, பணிகள் துரிதமாக நடக்கின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நிலம் கையகப்படுத்தும் எல்லையைக் குறித்து, அது தொடர்பான வேலைகளை முடித்தால், பாலம் கட்டும் பணி வேகம் குறையாமல் நடக்கும். இதனால், குறித்த காலத்திற்கு முன் மேம்பாலம், போக்குவரத்து பயன்பாட்டிற்கு தயாராகிவிடும் என தெரிகிறது.

கே.ராஜ்குமார்/சென்னை





      Our Apps Available On




      Dinamalar

      Follow us