ஆவின் பால் மையம் 51 இடங்களில் மூடல்
ஆவின் பால் மையம் 51 இடங்களில் மூடல்
ஆவின் பால் மையம் 51 இடங்களில் மூடல்
ADDED : ஜூலை 27, 2011 02:48 AM
சென்னை : பொதுமக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லாததால்,சென்னை மற்றும்
புறநகரில் 51 ஆவின் தானியங்கி பால் விற்பனை நிலையங்கள் இழுத்து
மூடப்பட்டுள்ளன.பால் விற்பனையில், கடந்த சில ஆண்டுகளாக தனியார் நிறுவனங்கள்
பொதுமக்கள் வரவேற்பை பெற்று வருகின்றன. இதனால், அரசு நிறுவனமான ஆவின் பால்
விற்பனை ஓரளவு மங்க துவங்கியுள்ளது. குறிப்பாக, தானியங்கி இயந்திரங்கள்
மூலமான பால் விற்பனை மையங்கள், போதிய விற்பனை இல்லாமல் இழுத்து மூடப்பட்டு
வருகின்றன. சென்னை மற்றும் புறநகரில் 216 தானியங்கி இயந்திரங்கள் மூலம்
பால் விற்பனை நடந்து வந்தது. தற்போதுள்ள 165 பால் விற்பனை மையங்கள் மூலம்
தினசரி 26 ஆயிரத்து 381 லிட்டர் பால் விற்பனை நடக்கிறது. இதில், 51
மையங்கள் கடந்த காலங்களில் படிப்படியாக மூடப்பட்டுள்ளன.போதிய விற்பனை
இல்லாததும், கமிஷன் அடிப்படையில் நடத்த யாரும் பால் விற்பனைக்கு
முன்வராததும் தான் இம்மையங்கள் மூடப்பட்டதற்கு காரணம். ஆவின்
நிறுவனத்திலும் ஆட்கள் பற்றாக்குறை உள்ளது.இது குறித்து, ஆவின் நிர்வாக
அதிகாரி ஒருவர் கூறும்போது, ''தானியங்கி இயந்திரங்கள் மூலமான பால் விற்பனை
குறைந்து வருவது உண்மை.
தானியங்கி பால் இயந்திரங்களை பராமரிப்பது கஷ்டம்.
பாலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும், 'ப்ரீசர்' அடிக்கடி
பழுதாகிவிடுகிறது. 100 லிட்டருக்கும் குறைவான விற்பனை உள்ள இடத்தில்,
தொடர்ந்து விற்பனை செய்வது நஷ்டத்தை ஏற்படுத்தும்.இதை கமிஷன் அடிப்படையில்
நடத்த கூட யாரும் முன்வருவதில்லை. குறைந்தபட்சம் 400 லிட்டர் வரை விற்பனை
நடக்கும் இடங்களில் மட்டுமே, தானியங்கி இயந்திரங்கள் மூலம் பால் விற்பனை
நடக்கிறது. மற்றபடி ஆவின் பால் பாக்கெட் விற்பனை அமோகமாக உள்ளது. தற்போது
சென்னை மற்றும் புறநகரில் இயங்கி வரும் 165 தானியங்கி இயந்திரங்கள் பால்
விற்பனை மையத்தில் 58 இடங்களில் ஆவினின் மற்ற பொருட்கள் விற்பனை
நடக்கிறது,'' என்றார்.
கே.எஸ்.வடிவேலு